“காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் தயார்” - கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ குறித்து சென்சார் போர்டு
மும்பை: “ரிவைசிங் கமிட்டி சொல்லும் காட்சிகளை ‘எமர்ஜென்சி’ படத்தில் இருந்து நீக்கினால், சென்சார் சான்றிதழ் தர தயார்” என சென்சார் போர்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘எமர்ஜென்சி’. இந்தப் படத்தில் சீக்கியர்களை தவறாக சித்தரித்ததாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்தப் படத்தின் துணை தயாரிப்பு நிறுவனமான ஜீ என்டர்டெயின்மென்ட் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் சென்சார் போர்டுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்சார் சான்றிதழை வழங்குவது குறித்து உரிய முடிவை அறிவிக்க கோரி சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று (செப்.26) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்சார் போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபினவ்விடம் நீதிபதிகள், “ஏதாவது நல்ல செய்தியை சொல்லுங்கள்” என்று கேட்க, அதற்கு அவர், “சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டி படத்தில் சில காட்சிகளை நீக்க பரிந்துரைத்துள்ளது. தேவையான மாற்றங்கள் நிகழ்த்திய பின்பு, படத்துக்கான சென்சார் சான்றிதழ் வழங்கப்படும்” என தெரிவித்தார். அப்போது ஜீ என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “சென்சார் போர்டு ரிவைசிங் கமிட்டி கூறிய திருத்தங்களை செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க வழக்கின் விசாரணையை ஒத்திவைக்குமாறு நீதிபதியிடம் கோரினார். இதையடுத்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
