ஹேமா கமிட்டி அறிக்கை பின்னணியில் உருவாகிறதா ‘தி கேரளா ஸ்டோரி 2’? - இயக்குநர் விளக்கம்

ஹேமா கமிட்டி அறிக்கை பின்னணியில் உருவாகிறதா ‘தி கேரளா ஸ்டோரி 2’? - இயக்குநர் விளக்கம்

Published on

மும்பை சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கேரளாவில் இளம்பெண்களை மதமாற்றம் செய்து அவர்களைத் தீவிரவாதிகளின் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்துவதாக இந்தப் படத்தில் காட்சிகள் இடம்பெற்றன. இதில் அடா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில மாநிலங்களில் இந்தப் படம் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாகவும் கேரளாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

இதுகுறித்து சுதிப்டோ சென்னிடம் கேட்டபோது, “ தி கேரளா ஸ்டோரி படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது என்பது உண்மைதான். இப்போது அதன் ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருகின்றன. இதற்கும் ஹேமா கமிட்டி அறிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்படியொரு பொய் தகவல் எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த தகவலில் உண்மையில்லை” என்றார். ‘தி கேரளா ஸ்டோரி’ 2-ம் பாகத்திலும் அடா சர்மா முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in