“திரையுலகமே என்னை கைவிட்டு விட்டது” - ‘எமர்ஜென்சி’ பட பிரச்சினையில் கங்கனா புலம்பல்

“திரையுலகமே என்னை கைவிட்டு விட்டது” - ‘எமர்ஜென்சி’ பட பிரச்சினையில் கங்கனா புலம்பல்
Updated on
1 min read

மும்பை: “காங்கிரஸ் கட்சியிலிருந்து யாரும் எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. திரையுலகத்தில் இருந்துமே கூட எனக்கு எந்த ஆதரவும் வரவில்லை. நான் தனித்து விடப்பட்டதாக உணர்கிறேன்” என தனது ‘எமர்ஜென்சி’ படம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “இதற்கு முன்பும் சில படங்களுக்கு நெருக்கடிகள் வந்துள்ளன. உதாரணமாக, ’பத்மாவத்’, ‘உட்தா பஞ்சாப்’ போன்ற படங்களுக்கு நெருக்கடி வந்தபோதிலும், அந்தப் படங்கள் பிரச்சினையில்லாமல் வெளியானது. மூக்கை அறுப்போம், கழுத்தை அறுப்போம் போன்ற மிரட்டல்கள் அந்தப் படங்களுக்கு வந்தன. ஆனால், அரசாங்கம் உரிய பாதுகாப்பு அளித்து படத்தை வெளியிட்டது. ஆனால், இதுவே என்னுடைய படத்துக்கு என்று வரும்போது, யாரும் எனக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரும் எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

சொல்லப்போனால், திரையுலகத்தில் இருந்துமே கூட எனக்கு எந்த ஆதரவும் வரவில்லை. நான் தனித்து விடப்பட்டதாக உணர்கிறேன். இந்த மாதிரியான குறுகிய மனப்பான்மை உடையவர்களின் சிந்தனைகளை பார்க்கும்போது, மக்களிடம் எனக்கு என்ன மாதிரியான நம்பிக்கை எஞ்சியிருக்க போகிறது?” என்றார். மேலும், “நான் தயாரித்த திரைப்படம் வெளியாகவில்லை என திரையுலகமே கொண்டாடுகிறது” என வேதனைப் பகிர்ந்துள்ளார்.

கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ திரைப்படம் செப்டம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்தப் படத்தில் சீக்கியர்களை தவறாக சித்தரித்ததாக கூறி, படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in