

ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’மூலம் இந்திக்குச் சென்றார், இயக்குநர் அட்லி. அந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்தது. அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க இருந்தார். அந்தப் படத்துக்காக அவர், தனக்கு ரூ.80 கோடி சம்பளம் கேட்டதாகச் செய்திகள் வெளியாயின. அதனால் படத்தைத் தயாரிக்க இருந்த கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் அதை கைவிட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை அட்லி இயக்குகிறார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது. இந்தப் படத்தின் லைனை கேட்ட சல்மான் கான் நடிக்க சம்மதித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இரண்டு ஹீரோ சப்ஜெக்டான இதில் தென்னிந்திய ஹீரோ ஒருவர் நடிக்க இருப்பதாக அடுத்த அப்டேட் வெளியானது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அதில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
நடிகர் சல்மான் கான், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சிக்கந்தர்’ படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்துவிட்டு அட்லி இயக்கத்தில் நடிப்பார் என்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி படத்தில் ரஜினிகாந்த், அடுத்து நடிக்க இருக்கிறார்.