

தமிழ்ப் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், முதன்முறையாக பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்குகிறார்.
'அறிந்தும் அறியாமலும்', ‘பட்டியல்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ என ஹிட் கொடுத்தவர் விஷ்ணுவர்தன். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘யட்சன்’. ஆர்யாவும், விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணாவும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஆக்ஷன் காமெடிப் படமான இது, 2015ஆம் ஆண்டு வெளியானது. ஆனால், படம் சரியாகப் போகவில்லை.
எனவே, இரண்டு வருடங்களுக்கும் மேலாக எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்த விஷ்ணுவர்தன், தற்போது தன்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கியுள்ளார். ஆனால், தமிழில் இல்லை. முதன்முறையாக ஒரு பாலிவுட் படத்தை இயக்க இருக்கிறார்.
1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர் விக்ரம் பத்ரா. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 24 வயதிலேயே வீர மரணம் அடைந்த இவருடைய வாழ்க்கையைத்தான் படமாக எடுக்கப் போகிறார் விஷ்ணுவர்தன்.
விக்ரம் பத்ரா வேடத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்க இருக்கிறார். தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் கரண் ஜோஹர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஸ்ரீவஸ்தவா, படத்தின் கதையை எழுதியுள்ளார். அடுத்த வருடம் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
இதை மிஸ் பண்ணிடாதீங்க...