

‘பிரேமம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் அர்ஜுன் கபூர் நடிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ரிலீஸான மலையாளப் படம் ‘பிரேமம்’. நிவின் பாலி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ஹீரோயின்களாக சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்தனர். கேரளாவைத் தாண்டி தமிழ்நாட்டிலும் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடியது. சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள எஸ்கேப் திரையரங்கில், 225 நாட்கள் ஓடி சாதனை படைத்தது இந்தப் படம்.
4 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் வசூலித்த இந்தப் படம், இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. அபிஷேக் கபூர் இயக்க இருக்கும் இந்தப் படத்தில், நிவின் பாலி கேரக்டரில் அர்ஜுன் கபூர் நடிக்கிறார்.
‘பிரேமம்’ ஏற்கெனவே அதே பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அதில், நிவின் பாலி கேரக்டரில் நாக சைதன்யா நடித்தார். சாய் பல்லவி கேரக்டரில் ஸ்ருதி ஹாசன் நடிக்க, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா செபாஸ்டியன் இருவரும் தெலுங்கிலும் நடித்துள்ளனர்.