Published : 25 May 2024 03:03 PM
Last Updated : 25 May 2024 03:03 PM

“அம்பேத்கரும், காந்தியும் விவாதிப்பதை பார்க்க ஆசைப்படுகிறேன்” - ஜான்வி கபூர் பகிர்வு

மும்பை: “அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களின் சித்தாந்தங்களுக்கு இடையிலான உரையாடலையும், அவர்களின் பார்வையையும் அறிந்துகொள்ள முடியும்” என்று நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ் அன் மிஸஸ் மஹி’ (Mr and Mrs Mahi). இப்படம் வரும் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது தொடர்பான புரொமோஷன் நிகழ்வுகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றின் சிறு பகுதி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டியில் பேசிய ஜான்வி கபூர் தனக்கு வரலாற்றில் அதிக ஆர்வம் இருப்பதாக கூற, உடனே நெறியாளர், ‘வரலாற்றின் எந்த காலக்கட்டத்துக்கு செல்ல விரும்புகிறீர்கள்’ என்று கேட்கிறார். அதற்கு அவர், “தேசத்தந்தை மகாத்மா காந்திக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் குழுவின் தலைவராக இருந்த அம்பேத்கருக்கும் இடையில் ‘சாதி’ குறித்து அவர்களின் பார்வையையும், கருத்துகளையும், விவாதங்களையும் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களின் சித்தாந்தங்களுக்கு இடையிலான உரையாடலையும், பல்வேறு விஷயங்களில் அவர்கள் கொண்டிருந்த பார்வையையும் அறிந்துகொள்ளலாம். மேலும் அந்த விவாதம் அழுத்தமான விவாதமாக இருக்கும் என நம்புகிறேன்.

சாதி குறித்த தன்னுடைய நிலைப்பாட்டில் தொடக்கத்திலிருந்தே அம்பேத்கர், தெளிவாகவும், கடுமையாகவும் இருந்தார் என நினைக்கிறேன். காந்தியை பொறுத்தவரை அவரது பார்வை பரிணமித்துக் கொண்டேயிருந்தது. நம் சமூகத்தில் இருக்கும் இந்த சாதிய பிரச்சினை பொறுத்தவரை, மூன்றாவது நபரின் கண்ணோட்டத்திலிருந்து அதை பார்ப்பதற்கும், அந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது” என்றார்.

அவரிடம், “உங்கள் பள்ளியில் சாதி குறித்து விவாதம் நடக்குமா?” என நெறியாளர் கேட்க, “பள்ளி மட்டுமல்ல, எனது வீட்டிலும் கூட அது தொடர்பான விவாதம் நடந்தது கிடையாது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x