

சத்யமேவ ஜெயதே டிவி நிகழ்ச்சியை ஆரம்பித்த பின் யாருக்கும் தனது திரைப்படங்களின் மேல் ஆர்வம் வருவதில்லை என நடிகர் ஆமிர் கான் தெரிவித்துள்ளார்.
சமூக பிரச்சினைகளைப் பற்றி அலசி தீர்வு காண முயலும் புதிய எண்ணத்துடன் சத்யமேவ ஜெயதே என்ற நிகழ்ச்சியை ஆமிர்கான் துவக்கினார். இதுவே அவர் தொலைக்காட்சியில் நடத்தும் முதல் நிகழ்ச்சி. இதன் மூன்றாவது சீசன் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியே மக்களுக்கு தன் படங்கள் மீது ஆர்வம் குறைய காரணமாக உள்ளதாக ஆமிர் கான் கூறியுள்ளார்.
இது பற்றி ஆமிர் கான் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:
"ஒரு நடிகனாக எனக்கு சில பொறுப்புகள் உள்ளன. சத்யமேவ ஜெயதேவுக்குப் பிறகு யாரும் என்ன நடிகனாகவே பார்ப்பதில்லை. பிகே படத்தின் படப்பிடிப்புக்காக ராஜஸ்தானில் இருந்தபோது ஒரு பத்திரிக்கையாளர் கூட அந்த படத்தைப் பற்றி கேள்வி கேட்கவில்லை. மாறாக அவர்களது கேள்விகள் சத்யமேவ ஜெயதேவைப் பற்றியே இருந்தன.
மக்களுக்கு எனது திரைப்படங்களின் மேல் ஆர்வம் குறைந்துவிட்டது என நினைக்கிறேன். நான் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது"
இவ்வாறு ஆமிர் கான் பேசியுள்ளார். அண்மையில் பிகே திரைப்பட போஸ்டர்களில் நிர்வாணமாக தோன்றி, சர்ச்சை கிளம்பியதைப் பற்றி கேட்டபோது, "நான் நடிப்பதை மக்கள் 25 ஆண்டுகளாக பார்த்து வருகிறார்கள். ஒரு நடிகனாக, எனது ரசிகர்களின் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. வழக்கு தொடர்ந்துள்ள இரண்டு பேரைத் தவிர மற்ற அனைவருக்கும் என்னைப் பற்றி தெரியும்.
எனது திரைப்படங்களில் குத்துப் பாடல்கள் இருக்காது. டெல்லி பெல்லி திரைப்படத்தின் விளம்பரங்களில் கூட அது வயது வந்தவர்களுக்கான படம் என்றே சொல்லி வந்தேன். பிகே படத்தைப் பார்த்த பின் அனைத்தும் உங்களுக்கு புரியும்" என்று கூறினார்