

பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்புக்காக நடிகைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை நியாயப்படுத்தும் வகையில் பிரபல நடன இயக்குநர் சரோஜ் கான் பேசியுள்ளதை சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
பாலிவுட் மட்டுமின்றி கோலிவுட், டோலிவுட் என அனைத்து சினிமாவிலும் பட வாய்ப்புக்காக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நிகழ்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனை, பல்வேறு நடிகைகளே ஒப்புக்கொண்ட உதாரணங்களும் உள்ளன. ஆனால், சினிமாவில் மட்டும் அத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதில்லை, பல்வேறு துறைகளிலும் பாலியல் வற்புறுத்தல்கள் இருப்பதாக சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் நியாயப்படுத்தியும் அவ்வப்போது பேசி வருகின்றனர்.
அதற்கு சமீபத்திய உதாரணமாக பாலிவுட்டில் 2,000 பாடல்களுக்கும் மேல் நடனம் அமைத்த பிரபல நடன இயக்குநர் சரோஜ் கான் சர்ச்சையில் இணைந்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு சரோஜ் கான் அளித்த பேட்டியொன்றில், “ஆதாம் காலத்திலிருந்து இத்தகைய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இது புதிதல்ல. பெண்களை தங்களுக்கு சாதகமாக சிலர் பயன்படுத்தத்தான் செய்வார்கள். பாலிவுட்டில் அவ்வாறு நடைபெறுவது நூற்றாண்டைக் கடந்த வழக்கம். பாலிவுட்டில் மட்டும் தான் அத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று கூறுவது ஏற்புடையது அல்ல.
அரசு அதிகாரிகளே பாலியல் வற்புறுத்தல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளார்கள். ஆனால், நாம் ஏன் சினிமா துறையையே குறை கூறிக்கொண்டிருக்கிறோம்?
பாலிவுட்டில் நடிகைகளின் ஒப்புதலுடன் தான் அத்தகைய பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்லாமல், அதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறதே. பாலிவுட்டில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அப்படியே விட்டுவிடுவதில்லையே?
எல்லாமே ஒரு பெண்ணைப் பொறுத்தது தான். தவறானவர்களின் கைகளில் சிக்கக்கூடாது என ஒரு பெண் விரும்பினால் அவள் அத்தகைய நிலைமைக்கு ஆளாக மாட்டாள். திறமையிருந்தால் ஏன் ஒரு பெண் அவளை விற்க வேண்டும்? சினிமா துறையை குற்றம் சொல்ல வேண்டாம். எல்லாமே நம் கைகளில் தான் உள்ளது” என தெரிவித்தார்.
பாலிவுட்டில் பெண்களுக்கு பாலியல் வற்புறுத்தல் நடந்தாலும், அதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரம் மேம்படுவதாக சரோஜ் கான் பேசியுள்ளது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.