

நடிகர் அமீர்கானின் 'பி.கே' திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தி முன்னணி நடிகர் ஆமிர்கான் நடித்துள்ள 'பி.கே' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஆமிர்கான் ரேடியோவை கையில் வைத்துக்கொண்டு, ஏறக்குறைய நிர்வாணமாக நிற்பது போன்று காட்சியளித்தார்.
இந்தப் போஸ்டர் இணையத்திலும், மக்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. ஆமிர்கானுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்தன.
இதனிடையே, 'பி.கே' படத்தை வெளியிட தடைவிதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், 'ஆபாசம் மற்றும் மத நல்லிணக்க' அடிப்படையில் அப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த வழக்கை இன்று உச்ச நீதிமன்றம், ஆமீர்கான் படத்துக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்தது. இது தொடர்பான உத்தரவில், "திரைப்படம் என்பது கலை சார்ந்தது. எந்த ஒரு திரைப்படம் மீதும், எந்தவித கட்டுப்பாடுகளையும் கூறித் தடை விதிக்க கோரினாலும் அதனை ஏற்க முடியாது.
திரைப்படங்களை வெளியிடத் தடை விதிப்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகும். திரைப்படம் பிடிக்கவில்லை என்றால், அதனை பார்ப்பதை தவிர்த்து விடலாம். அதனை மீறி திரைப்படம் மீது மதம் சார்ந்த முகாந்திரங்களை திணிப்பது ஏற்கத்தக்கதல்ல" என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.