“பிரச்சாரப் படமல்ல, விழிப்புணர்வுப் படம்” - ‘ஆர்டிக்கிள் 370’ குறித்து பிரியாமணி விளக்கம்

“பிரச்சாரப் படமல்ல, விழிப்புணர்வுப் படம்” - ‘ஆர்டிக்கிள் 370’ குறித்து பிரியாமணி விளக்கம்
Updated on
1 min read

மும்பை: ‘ஆர்டிக்கிள் 370’ திரைப்படம் ஒரு பிரச்சாரப் படம் அல்ல, அது ஒரு விழிப்புணர்வுப் படம் என்று அப்படத்தில் நடித்த நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.

ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில் யாமி கவுதம், பிரியாமணி நடித்துள்ள ‘ஆர்டிக்கிள் 370’ படம் கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து பேசும் இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. வசூல்ரீதியாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் வெளியாவதற்கு முன்பு ஜம்மு-காஷ்மீரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்துகொள்ள இப்படம் உதவும்” என்று பாராட்டியிருந்தார்.

இப்படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம்பெற்றதாக கூறி வளைகுடா நாடுகளில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனியார் செய்தி ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள நடிகை பிரியாமணி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஒரு பிரிவினர் இப்படத்தை பிரச்சாரப் படம் என்று கூறுகின்றனர். இது ஒரு விழிப்புணர்வுப் படம். இந்த கதைகள் மக்களுக்கு சொல்லப்பட வேண்டும். இப்படத்தை நாங்கள் கையில் எடுக்கும்போது, மக்களில் பலபேருக்கு தெரியாத இதுபோன்ற ஒரு வரலாற்று நிகழ்வை அவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே எங்களுடைய பிரதான நோக்கமாக இருந்தது.

மக்கள் இதைப் பற்றி அறிந்திருந்தனர். ஆனால் அதற்கு இந்த பணி வெற்றியடைவதற்கு என்ன நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டன என்பது அவர்களுக்கு தெரியாது. ஒருவர் இதுபோன்ற திட்டங்களை மேற்கொள்ளும் மேற்கொள்ளும் போது, உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஒரு உயிர் கூட போகாத வகையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட ஒரு திட்டம் இது. இது ஒரு ரகசிய திட்டம் என்பதால் பலருக்கு இதுபற்றி தெரியாது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன் எனக்கே கூட இந்த திட்டம் பற்றி தெரியாது. இப்படத்தில் காட்டப்பட்ட அனைத்தும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in