Published : 12 Feb 2024 05:16 PM
Last Updated : 12 Feb 2024 05:16 PM

ரன்வீர் சிங் - ஜானி சின்ஸ் தோன்றும் புதிய விளம்பர வீடியோ வைரல்!

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், போர்னோ நடிகர் ஜானி சின்ஸ் இணைந்து நடித்துள்ள புதிய விளம்பரம் ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாலியல் ஆரோக்கியத்தை (sexual health) வலியுறுத்தும் இந்த வீடியோ இந்தி மெகா சீரியல்களின் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ரன்வீர் சிங்கின் சகோதரராக ஜானி சின்ஸ் நடித்துள்ளார். பிரமாண்டமான பணக்கார குடும்பம் அது. தனது சகோதரனின் மனைவி வீட்டை வீட்டு வெளியேறுவதை தடுத்து நிறுத்துகிறார் ரன்வீர் சிங். அப்போது அமைதியாக ஒன்றும் தெரியாதது போல அப்பாவியாக அருகில் நின்றுகொண்டிருக்கிறார் ஜானி சின்ஸ்.

வீட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்கும்போது, ஜானி சின்ஸுக்கு பாலியல் குறைபாடு இருப்பதாகவும், பெட்ரூமில் அவரால் சரியாக செயல்படமுடியவில்லை என்பதால்தான் வீட்டிலிருந்து வெளியேறுவதாகவும் கூறுகிறார் அவரது மனைவி. பொதுவெளியில் இப்படி பேசுவதா என்று நடுவில் புகுந்த பெண் ஒருவர், ஜானி சின்ஸின் மனைவியை அடிக்க, அவர் தவறி மாடியிலிருந்து கீழ விழும் காட்சி பரபரப்பாக காட்டப்படுகிறது.

உடனே சுதாரித்துக்கொள்ளும் ரன்வீர் சிங், ஜானி சின்ஸிடம் பாலியல் பிரச்சினையை சரிசெய்யும் மாத்திரை ஒன்றை கொடுக்கிறார். தனது மனைவி தரையில் விழுவதற்குள் அந்த மாத்திரையை சாப்பிட்டு பிரச்சினையை சரிசெய்துவிடுகிறார் ஜானி சின்ஸ். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

“இந்திய விளம்பர வீடியோக்களில் ஜானி சின்ஸ் எப்போது இணைந்தார்?” என நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். காரணம், போர்னோ நடிகரான ஜானி சின்ஸை இப்படியான விளம்பரத்துக்குள் கொண்டு வந்தது இந்த வீடியோவின் கவனத்தை வெகுவாக கவர வைப்பதற்கான யுக்தியாக பார்க்கப்படுகிறது.

‘#TakeBoldCareOfHer’ என்ற பிரசாரத்தின் ஒருபகுதியாக இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, நீண்ட காலமாக பாலியல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஆண்களுடன் பயம், சங்கடம் காரணமாக அமைதியாக இருக்கும் நிலையை உடைத்து பேசுவதற்கான தளத்தை அமைத்து கொடுப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம்தான் இது.

இது தொடர்பாக ரன்வீர் சிங் கூறும்போது, “என்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இதில் இணைந்துள்ளேன். இந்த போல்ட் கேர் என்ற பிரச்சாரம் வெளிப்படையாக பேசுவதை வலியுறுத்துகிறது. ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை அணுகும் முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதற்கான தீர்வை நோக்கி நகர்வதன் அவசியத்தை பேசுவதற்கான நோக்கம்தான் இது” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x