Published : 10 Feb 2024 03:03 PM
Last Updated : 10 Feb 2024 03:03 PM

“இது பாஜகவுக்கான பிரச்சாரப் படம் அல்ல!” - ‘ஆர்டிக்கிள் 370’ பட தயாரிப்பாளர்

மும்பை: “பாஜக தேர்தலில் மீண்டும் வெற்றி பெற இதுபோன்ற சிறிய படங்களின் உதவி தேவையில்லை. கடந்த 100 ஆண்டுகளாக யாராலும் முடியாத ராமர் கோயிலை கட்டி முடித்துள்ளனர். எனவே, அவர்கள் எங்களை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை” என்று ‘ஆர்டிக்கிள் 370’ பட தயாரிப்பாளர் ஆதித்யா தர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை யாமி கவுதம், பிரியாமணி நடித்துள்ள ‘ஆர்டிக்கிள் 370’ படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து பேசும் இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பட தயாரிப்பாளர் ஆதித்யா தர், “சரியான நோக்கத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நான் இயக்குநராக, தயாரிப்பாளராக இருக்கும் வரை எப்போதும் இதன் நோக்கம் சரியானதாகத்தான் இருக்கும். அப்படி எதாவது ஒரு நாள் இந்தப் படத்தின் நோக்கம் தவறாகும்போது நான் திரைத் துறையிலிருந்து விலகிவிடுவேன். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து எனக்கு கவலையில்லை. குறிப்பாக குறிப்பிட்ட நோக்கத்துக்காக விமர்சிப்பவர்களை நாம் கண்டுகொள்வதில்லை.

விமர்சகர்கள் சொல்வது போல இதை ஒரு பிரச்சார படமாக நான் கருதவில்லை. அவர்களின் எண்ணம்தான் இந்தப் படத்தை பிரச்சாரப் படமாக பார்க்க வைக்கிறது. ‘ஆர்டிக்கள் 370’ என்பது இந்தியாவை மையப்படுத்திய திரைப்படம். இது ஓர் ஆச்சரியமான கதை. நான் இதுவரை கேட்டதிலேயே சிறப்பான கதை என்றும் இதைச் சொல்வேன்” என்றார்.

மேலும், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இப்படம் வெளியாவது குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், “பாஜக தேர்தலில் மீண்டும் வெற்றி பெற இதுபோன்ற சிறிய படங்களின் உதவி தேவையில்லை. கடந்த 100 ஆண்டுகளாக யாராலும் முடியாத ராமர் கோயிலை கட்டி முடித்துள்ளனர். எனவே அவர்கள் எங்களை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x