

மலையாள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரின் சமீபத்திய ரசிகர், பாலிவுட் நடிகர் ரிஷி கபூர். தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ப்ரியாவை வாழ்த்தி பதிவிட்டுள்ளார் ரிஷி கபூர்.
ஒரு அடார் லவ் என்ற படத்தில் மாணிக்ய மலராய என்ற பாடலில் நடித்திருக்கும் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர், இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளார். அந்தப் பாடலில் அவர் காட்டியிருக்கும் முக பாவனைகளுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி ஒரே இரவில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுவிட்டார். தேசிய ஊடகங்கள் அவரை பேட்டியெடுத்து இன்னும் பிரபலப்படுத்திவிட்டன.
தற்போது, பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், ப்ரியாவை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
"ப்ரியா வாரியர். இந்த பெண்ணுக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். உணர்ச்சிகளை நன்கு வெளிப்படுத்தக்கூடிய, குறும்புத்தனமான அதே வேளையில் தன்மையான அப்பாவித்தனமான முகபாவனைகள். என் இனிய ப்ரியா, உனது வயதையொத்த மற்றவர்களுக்கு கண்டிப்பாக பெரிய போட்டியாக இருக்கப் போகிறாய். கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். சிறந்ததே கிடைக்கட்டும். நான் நடித்துக் கொண்டிருக்கும்போது நீ நடிக்க வரவில்லையே, ஏன்? (lol)" என்று ரிஷி கபூர் குறிப்பிட்டுள்ளார்.