“உங்கள் படத்தில் எனக்கு ரோல் கொடுத்துவிடாதீர்கள். ஏனெனில்...” - ‘அனிமல்’ இயக்குநருக்கு கங்கனா பதில்

“உங்கள் படத்தில் எனக்கு ரோல் கொடுத்துவிடாதீர்கள். ஏனெனில்...” - ‘அனிமல்’ இயக்குநருக்கு கங்கனா பதில்
Updated on
1 min read

மும்பை: “தயவுசெய்து எனக்கு உங்கள் படத்தில் எந்தக் கதாபாத்திரத்தையும் எனக்கு கொடுத்துவிடாதீர்கள். அப்படிக்கொடுத்தால் உங்கள் ஆல்பா ஆண் ஹீரோக்கள் பெண்ணியவாதிகளாக மாறிவிடுவார்கள்” என ‘அனிமல்’ பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவுக்கு நடிகை கங்கனா ரனாவத் பதிலளித்துள்ளார்.

சந்தீப் ரெட்டி வாங்கா அண்மையில் கொடுத்த நேர்காணலில் கங்கனாவை புகழ்ந்திருந்தார். அந்தப் பேட்டியில் அவர், “எனக்கு வாய்ப்பு அமைந்து, சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமானவராக இருப்பார் என நான் உணர்ந்தால், கண்டிப்பாக கங்கனாவை சந்தித்து கதையைச் சொல்வேன். ‘குயின்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் அவர் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

என்னுடைய ‘அனிமல்’ படத்துக்கு அவர் எதிர்மறையான விமர்சனத்தை முன்வைத்தார். ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு அதைப் பார்த்து எந்தக் கோபமும் வரவில்லை. காரணம், நான் அவரது திறமையை நான் உணர்ந்திருக்கிறேன். அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்றார்.

சந்தீப் ரெட்டி வாங்காவின் கருத்துக்கு பதிலளித்துள்ள நடிகை கங்கனா, “ரிவ்யூவும், விமர்சனமும் ஒன்றல்ல. அனைத்து வகையான கலைகளும் ரிவ்யூ செய்யப்பட வேண்டும். மேலும் அது விவாதிக்கப்பட வேண்டும். அது ஒரு சாதாரண விஷயம். சந்தீப் என்னுடைய விமர்சனத்துக்கு சிரிப்பை பதிலாக வழங்கினார். இதன் மூலம் அவர் ஆண்மையவாத படங்களை இயக்குபவர் மட்டுமல்ல. அவரது அணுகுமுறையும் கிட்டதட்ட அதே போன்றதுதான் என்பதை உணர்ந்தேன். நன்றி சார்.

ஆனால், தயவுசெய்து எனக்கு எந்தக் கதாபாத்திரத்தையும் கொடுத்துவிடாதீர்கள். அப்படிக் கொடுத்தால் உங்கள் ஆல்பா ஆண் ஹீரோக்கள் பெண்ணியவாதிகளாக மாறிவிடுவார்கள். அதனால் உங்கள் படங்களும் பாதிக்கப்படும். நீங்கள் பிளாக்பஸ்டர்களை கொடுக்கிறீர்கள், திரைப்படத் துறைக்கு நீங்கள் தேவை” என பதிலளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in