

பாலிவுட்டின் ’அய்யாரி’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
'அய்யாரி' பாலிவுட் திரைப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் மனோஜ் பாஜ்பாயி இருவரும் ராணுவ அதிகாரிகளாக நடித்துள்ளனர். நாயகியாக ராகுல் பிரித் சிங் நடித்துள்ளார். ராணுவப் பின்னணியிலிருந்து சொல்லப்படும் இக்கதையில் இந்திய ராணுவத்திற்குள்ளிருந்தே தேசத் துரோகம் மற்றும் ஊழலில் ஈடுபடுபவர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
ராணுவ ரகசியங்களில் பிற நாடுகளுடன் சமரசம் கூடாது என்பதை வலியுறுத்தி பேசப்பட்டுள்ள 'அய்யாரி' படத்தைத் திரையிட பாகிஸ்தானில் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இந்தியாவில் வெளியான இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அப்படத்தில் கதாநாயகன் சித்தார்த் மல்ஹோத்ரா, "இந்தப் படத்தில் சொல்லப்பட்ட கருத்து மக்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர்கள் கதையுடன் ஒன்றியுள்ளனர்”
பாகிஸ்தானில் அய்யாரி தடை செய்யப்பட்டுள்ளது குறித்து, "இது தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். பல இந்தியப் படங்கள் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது. இது முதல்முறை அல்ல" என்றார்.
படத்தின் நாயகி ராகுல் ப்ரீத்தி சிங் கூறும்போது, படத்துக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. நான்கு வருடங்களுக்குப் பிறகு பாலிவுட்டில் நான் நடித்த படத்துக்கு நல்ல விமர்சனம் வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.