

இந்தி நடிகர் அமீர் கான் நடித்த 'டங்கல்', 'பி.கே.' திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்த நிலையில், சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்துள்ள 'சீக்ரெட் சூப்பர்ஸ்டார்' திரைப்படத்திற்கு சீனாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
'டங்கல்' படம் சீனாவில் திரையிடப்பட்ட முதல் நாள் கிடைத்த, வசூலைக் காட்டிலும், 'சீக்ரெட் சூப்பர்ஸ்டார்' வெள்ளிக்கிழமை திரையிடப்பட்ட முதல் நாளில், ரூ.43 கோடி வசூல்செய்து சாதனை படைத்துள்ளது.
'டங்கல்' திரைப்படத்தில் நடித்துள்ள காஷ்மீர் நடிகை ஜயிரா வாசிம் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அமீர் கான் சிறப்பு கதாபாத்திரத்தில் வருகிறார்.
இந்த திரைப்படம் குறித்து திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அமீர் கான் நடித்து சமீபத்தில் வெளியான 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' திரைப்படம் சீனாவில் வெள்ளிக்கிழமை திரையிடப்பட்டது. முதல் நாளிலேயே, ரூ.43 கோடி (67.90 லட்சம் டாலர்) வசூலித்து சாதனை படைத்துள்ளது. இது 'டங்கல்' திரைப்படம் வசூலித்த தொகையைக் காட்டிலும் கூடுதலாகும்.
இதற்கு முன் திரையிடப்பட்ட 'டங்கல்', 'பி.கே.' திரைப்படங்களைக் காட்டிலும், 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' படம் அமோக வசூலைப் படைத்துள்ளது. இன்னும் வசூலில் சாதனை படைக்கும், பொறுத்திருந்து பார்ப்போம்'' என்று தரண் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.
'டங்கல்' திரைப்படம் சீனாவில் ரூ.1,459 கோடி வசூலையும், உலக அளவில் ரூ.2 ஆயிரம் கோடியையும் வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.