

நமது பெருமிதம் கொள்ளக்கூடிய திரைப்படத்தில் ஒரு அங்கமாக இருப்பதற்காக பெருமை கொள்கிறேன் என்று ’பத்மாவத்’ திரைப்பட வெற்றி குறித்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கூறியுள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான ‘பத்மாவத்’ திரைப்படத்தில் ராணி பத்மாவதியாக தீபிகா படுகோனும் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீச் சிங்கும், மகஹர்வால் ரத்தன்சிங்காக ஷாகித் கபூரும் நடித்துள்ளதுள்ளனர்.
இப்படத்தில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கூறப்படும் சித்தூர் ராணி பத்மினியின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து இப்படத்தில் சில காட்சிகளை தணிக்கை செய்தும் படத்தின் பெயரை ‘பத்மாவத்’ என மாற்றம் செய்தும் திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து இப்படம் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ரன்வீர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்றிரவு 3டி ஐமேக்ஸில் ‘பத்மாவத்’ திரைப்படம் பார்த்தேன். நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.
நான் எனது குழுவை நினைத்து பெருமை கொள்கிறேன். எனது கதாப்பாத்திரத்துக்கு கிடைத்த பாராட்டுகளை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் அனைவரது அன்புக்கும் வாழ்த்துகள்.
சஞ்சய் லீலா பன்சாலி இந்த கதாப்பாத்திரத்தின் மூலம் எனக்கு பரிசை அளித்திருக்கிறார். இதற்காக நான் வாழ்நாள் முழுவதும் அவருக்கு கடன்பட்டிருக்கிறேன். ஒரு நடிகனாக என்னை நீங்கள் மெருக்கேற்றியுள்ளீர்கள்.
குடியரசு தின வாழ்த்துகளுடன் அனைவரையும் திரையரங்குக்கு அழைக்கிறேன். நம் நாடு பெருமிதம் கொள்ளக்கூடிய ஒரு திரைப்படத்தில் அங்கமாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். ஜெய்ஹிந்த்” என்று பதிவிட்டுள்ளார்.