

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பத்மாவத் திரைப்படத்தில் நடித்துள்ள ரன்வீர் சிங்கை பாராட்டி பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் அவருக்கு தன் கைப்பட கடிதம் எழுதியுள்ளார்.
சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கிய வரலாற்றுத் திரைப்படமான பத்மாவத்தைப் பார்த்த பிறகு அமிதாப் அனுப்பியுள்ள குறிப்பு மற்றும் பூச்செண்டு படத்தையும் தனது ட்விட்டரில் பகிர்ந்துகொண்ட ரன்வீர் சிங் 'தனக்கு விருது கிடைத்துவிட்டதாக' பதிவிட்டுள்ளார்.
"முஜே மேரா அவார்ட் மில் கயா (எனக்கு என்னுடைய விருது கிடைத்தது) @ எஸ்ஆர்.பச்சன்," என்று பதிவிட்டுள்ள ரன்வீர் சிங், வரலாற்றுக் காவியமான ஒரு திரைப்படத்தில் அலாவுதீன் கில்ஜியாக பாத்திரம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளதற்காக பெரும் எண்ணிக்கையிலான பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் தான் பெற்று வருவதைப் பற்றி தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதற்காக இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
ரன்வீர் 32 வயதில் நடித்த 'பஜிராவோ மஸ்தானி' படத்திற்காக இதேபோன்ற ஒரு கைப்பட எழுதிய பாராட்டுக் கடிதத்தை அமிதாப் பச்சனிடமிருந்து 2015ல் அவர் பெற்றார்.
தீபிகா படுகோனே பிரதான கதாப்பாத்திரத்தில் தோன்றி நடித்துள்ள , "பத்மாவத்" திரைப்படத்தில் ஷாஹித் கபூர், ஜிம் சர்ப், அதிதி ராவ் ஹைதாரி மற்றும் ராசா முராட் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
சில மாநிலங்களில் இப்படம் தடை செய்யப்பட்டபோதும், நாட்டின் பல இடங்களில் இப்படத்தை எதிர்த்து வன்முறை தாண்டவமாடியபோதும் இப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.