

மும்பை: இந்தி நடிகையான மிருணாள் தாக்குர், ‘சீதா ராமம்’ படம் மூலம் தென்னிந்தியாவிலும் பிரபலமானவர். இவர் இப்போது, தெலுங்கில் நானி ஜோடியாக ‘ஹாய் நானா’ படத்திலும் விஜய் தேவரகொண்டா வுடன் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்திலும் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலும் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மிருணாள் தாக்குர் தெலுங்கு நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக சில வாரங்களுக்கு முன் செய்தி பரவியது. அதை அவர் மறுத்திருந்தார்.
இப்போது பிரபல இந்தி ராப் பாடகரும் பாடலாசிரியருமான ஆதித்யா பிரதோக் சிங் என்ற பாட்ஷாவை அவர் காதலித்து வருவதாகக் செய்திகள் வெளியாயின. நடிகை ஷில்பா ஷெட்டி நடத்திய தீபாவளி பார்ட்டியில், இருவரும் கைகோத்தபடி ஒன்றாகச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாயின. இதனால் அவர்கள் நட்பைத் தாண்டிய உறவில் இருப்பதாக மும்பையில் செய்தி வெளியானது.
இந்நிலையில் இதற்குப் பதிலளித்துள்ள பாட்ஷா, “இணைய நண்பர்களே, உங்களை ஏமாற்றியதற்கு மன்னியுங்கள். நீங்கள் நினைப்பது போல் எதுவுமில்லை” என்று தெரிவித்துள்ளார்.