“ராமராக நடித்தபின் கமர்சியல் படவாய்ப்புகள் வரவில்லை” - நடிகர் அருண் கோவில்

“ராமராக நடித்தபின் கமர்சியல் படவாய்ப்புகள் வரவில்லை” - நடிகர் அருண் கோவில்
Updated on
1 min read

மும்பை: ராமனந்த சாகரின் ‘ராமாயணம்’ தொடரில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு கமர்சியல் படவாய்ப்புகளே தனக்கு வரவில்லை என நடிகர் அருண் கோவில் தெரிவித்துள்ளார்.

80களின் இறுதியில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான தொடர் ‘ராமாயணம்’. ராமனந்த சாகர் இயக்கிய இந்த தொடரில் ராமர் கதாபாத்திரத்தில் அருண் கோவில் நடித்திருந்தார். தீபிகா சிகாலியா சீதையாகவும், தாரா சிங் அனுமாராகவும் நடித்தனர். மொத்தம் 78 எபிசோட்களைக் கொண்ட இத்தொடர் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்றது.

அருண் கோவில் தற்போது ’ஹுகுஸ் புகுஸ்’ என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தொடர்பான ஒரு பேட்டியில் பேசிய அவர், ராமர் கதாபாத்திரத்தில் நடித்தபிறகு கமர்சியல் படவாய்ப்புகளே தனக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

ராமாயணம் தொடரால் நல்லவை, கெட்டவை என இரண்டுமே நடந்தன. எனக்கு நிறைய மரியாதையும், கவுரவமும் கிடைத்தது. ஆனால் எனக்கு கமர்ஷியல் பட வாய்ப்புகள் வருவது முற்றிலுமாக நின்றுவிட்டது. என்ன கதாபாத்திரத்தை எனக்கு கொடுக்க முடியும் என்று யோசிக்கும் அளவுக்கு என்னுடைய ராமர் இமேஜ் வலிமையாக இருப்பதாக இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் கூறினர். ‘மக்கள் உன்னை ராமராக பார்க்கிறார்கள். உன்னை அவர்கள் வேறு எந்த கதாபாத்திரத்திலும் பார்க்க மாட்டார்கள்’ என்றனர்.

ஒரு நடிகனாக இது நல்ல விஷயம் அல்ல. அது ஏற்படுத்திய எதிர்மறை விளைவு என்னுடம் பல ஆண்டுகள் தங்கிவிட்டது. அப்போது என்னால் எதுவுமே செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. திரைப்படங்கள் எனக்கு கேள்விக்குறியாக இருந்தன. ஆனால் சீரியல் வாய்ப்புகள் நிறைய வந்தன. அவற்றில் நான் வேண்டுமென்றே சில நெகட்டிவ் கதாபாத்திரங்களை செய்தேன். ஆனால் நான் அப்படி நடிப்பதை நானே பார்த்தபிறகு, இது எனக்கானது அல்ல என்பதை உணர்ந்தேன்” இவ்வாறு அருண் கோவில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in