

பெரும் சர்ச்சைச்களுக்கு உள்ளான 'பத்மாவதி' திரைப்படம் 'பத்மாவத்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஜனவரி 25- ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இந்த நிலையில் 'பத்மாவத்' திரைப்படம் கடந்த பாதை குறித்த ஒரு சிறிய அலசல்,
பன்சாலி மற்றும் வயாகாம் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'பத்மாவத்'. இதில் தீபிகா படுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர், படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வருகிறார். இந்தப் படம் ராணி பத்மினி பற்றிய கதையைக் கொண்ட வரலாற்றுத் திரைப்படமாகும். வரலாற்றின் படி அலாவுதீன் கில்ஜி, ராணி பத்மினியை தன் ஆசைக்கு இணங்க வைக்க கோட்டையை நோக்கி படையெடுத்தார். அப்போது கில்ஜியின் ஆசைக்கு இணங்க மறுத்த ராணி பத்மினி சில பெண்களுடன் தற்கொலை செய்துகொண்டார். இந்த வரலாற்றை அடிப்படையாகக் கொணடு பன்சாலி 'பத்மாவதி' கதையை உருவாக்கி வருகிறார்.
இப்படத்தில் அலாவுதீன் கில்ஜிக்கும், ராணி பத்மாவதிக்கும் இடையே சர்ச்சைக்குரிய பாடல் கட்சி இருப்பதாக இப்படத்துக்கு எதிராக பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த ஜனவரியில், 'பத்மாவதி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த செட்டில், படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் செட்டிற்குள் நுழைந்து அடித்து நொறுக்கியதோடு, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கினர்.
பன்சாலி தாக்கப்பட்டதற்கு இந்திய திரையுலகினரிடம் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து 'பத்மாவதி' படம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், 'பத்மாவதி' படத்தை அதிக பொறுப்புடனும், முயற்சிகளுடனும், நேர்மையுடனும் எடுத்துள்ளேன். படத்தில் பத்மாவதிக்கும், அலாவுதீன் கில்ஜிக்கும் கனவு பாடல் ஏதும் இல்லை" என்று தெரிவித்தார்.
சஞ்சய் லீலா பன்சாலி விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து அப்படத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
"உண்மைகளைத் திரித்தும், மக்களுடைய உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதால் திரைப்படத் தணிக்கை வாரியத்தை உரிய வகையில் எச்சரிக்க வேண்டும்" என்று பாஜக தலைமையிலான உத்தரப் பிரதேச மாநில அரசு கடிதமே எழுதியிருப்பது உச்சகட்ட முரண!
இந்தியாவில் பல மாநிலங்களில் எழுத்த எதிர்ப்பின் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வெளிவரவேண்டிய 'பத்மாவதி' திரைப்பட வெளியீடு தள்ளிப் போனது.
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, நடிகை தீபிகா படுகோன் ஆகியோரின் தலைக்கு ஹரியாணா பாஜக தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் ரூ 10 கோடி அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவதி' படத்தை வெளிநாடுகளில் வெளியிடத் தடை கோரி, 11 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
படத்தின் சர்ச்சை மிகுந்த காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
'பத்மாவதி' திரைப்படத்துக்கு தொடர் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் மம்தா பானர்ஜி போன்ற அரசியல் தலைவர்கள் ஆதரவாக குரல் அளித்தனர்.
பல எதிர்ப்புகளை தாண்டி 'பத்மாவதி' திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கடந்த மாதம் மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவால் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 'பத்மாவதி' திரைப்படம் 'பத்மாவத்' என்ற பெயரில் வரும் ஜனவரி 25-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.