சூதாட்ட செயலியில் இருந்து 6 முறை என்னை தொடர்பு கொண்டார்கள்: கங்கனா தகவல்

சூதாட்ட செயலியில் இருந்து 6 முறை என்னை தொடர்பு கொண்டார்கள்: கங்கனா தகவல்
Updated on
1 min read

மும்பை: சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகரும் அவர் நண்பர் ரவி உப்பாலும் துபாயில், மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கினர். இதன்படி போக்கர், கார்டு கேம்ஸ், டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தப்பட்டது. கடந்த பிப்ரவரியில் மகாதேவ்செயலியின் உரிமையாளர் சவுரப் சந்திரகரின் திருமணம் துபாயில் நடைபெற்றது. இதற்காக ரூ.260 கோடி செலவிடப்பட்டது. இந்த விழாவில் பாலிவுட் நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஹவாலா முறையில் பெரும் தொகை கைமாறியதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் சவுரப் சந்திரகர் சார்பில், துபாயில் அளிக்கப்பட்ட விருந்தில் பெரும்பாலான இந்தி நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். அவர்களுக்கு தலா ரூ.40 கோடி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

துபாயில் நடைபெற்ற சவுரப் சந்திரகரின் திருமணம் மூலம் மகாதேவ் செயலி வாயிலாக ரூ.5,000 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பது அமலாக்கத் துறைக்குத் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து சவுரப் சந்திரகருடன் தொடர்புடைய அனைத்து நடிகர், நடிகைகளையும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. நடிகர் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர், ஹுமா குரேஷி, ஹினா கான், நடிகர் கபில் சர்மா உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. அவர்கள் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் கங்கனா ரனாவத், இந்தச் செயலியில் இருந்து தனக்கு ஒரே வருடத்தில் 6 முறை அழைப்பு வந்ததாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், “அவர்கள் ஒவ்வொரு முறை அழைக்கும் போதும் என்னை விலைக்கு வாங்க பல கோடிகளை ஏற்றினர். ஒவ்வொரு முறையும் மறுத்தேன். நேர்மை என்பது உங்கள் மனசாட்சிக்கு மட்டுமல்ல, இது புதிய பாரதம், மேம்படுத்துங்கள், அல்லது உங்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in