

சல்மானின் கானில் நடிப்பில் வெளியாகும் 'டைகர் ஜிந்தா ஹை' திரைப்படம் வெளியாவதற்கு இரு நாட்கள் முன்னதாக சர்ச்சையில் சிக்கி உள்ளது.
இப்படம் டிசம்பர் 22-ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு திரையரங்குகளில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதே தேதியில் இரண்டு மராட்டியப் படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் மெகா பட்ஜெட் படமான ’டைகர் ஜிந்தா ஹை’ வெளியீடால், அவற்றுக்கு இடம் கிடைக்கவில்லை.
இதனால் மகாராஷ்டிர நவநிர்மாண் சித்ராபட் சேனா அமைப்பு திரையரங்க உரிமையாளர்களை எச்சரித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவ்வமைப்பின் உரிமையாளர் அமே கோப்கர், ''மராட்டிய படங்களான 'தேவா' மற்றும் 'கச்சி' ஆகியவற்றை பிரதான நேரத்தில் ஒளிபரப்ப வேண்டும்.
'டைகர் ஜிந்தா ஹை' உட்பட எந்தப் படத்துக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. அதே நேரத்தில் எங்களின் ஒரே கேள்வி, மற்ற படங்களும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளபோது ஏன் ஒரேயொரு படத்துக்கு மட்டுமே அனைத்துத் திரையரங்குகளும் ஒதுக்கப்பட வேண்டும்?
திரையரங்குகள் அனைத்தும் குறிப்பிட்ட ஒரு படத்துக்கு ஏகபோக உரிமை எடுத்துக் கொள்வதை சகித்துக்கொள்ள மாட்டோம்.
படப்பிடிப்புகள் அனைத்தும் மகாராஷ்டிராவில்தான் நடத்தப்படுகின்றன என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. இந்த விவகாரம் சுமுகமாகத் தீர்க்கப்படாத பட்சத்தில், அவர்களின் படப்பிடிப்புகளை நிறுத்த வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்.
மராத்தி பட தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தங்கள் சொந்த மாநிலத்திலேயே திரையரங்குகளுக்காகப் பிச்சையெடுக்க வேண்டியிருக்கிறது. பெரிய பட நிறுவனங்கள் முன்னதாகவே அனைத்து சினிமா திரையரங்குகளையும் முன்பதிவு செய்துவிடுகின்றன.
வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் 'டைகர் ஜிந்தா ஹை' படத்துக்காக சுமார் 95% அரங்குகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத்தான் எதிர்க்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
அலி அப்பாஸ் சஃபார் இயக்கியுள்ள இப்படத்தில் சல்மானுக்கு ஜோடியாக காத்ரினா கைஃப் நடித்துள்ளார். கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டுப் படம் டிசம்பர் 22-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.