

மும்பை: ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘டன்கி’ திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த ஆண்டில் வெளியாகும் மூன்றாவது ஷாருக்கான் படம் இது.
'3 இடியட்ஸ்', 'பிகே', 'சஞ்சு' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் ஒரு புதிய படத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்துக்கு 'டன்கி' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வீடியோ ஒன்றை படக்குழு கடந்த ஆண்டு வெளியிட்டது.
இந்த நிலையில், ’ஜவான்’ படம் தொடர்பான நிகழ்வு ஒன்றில் பேசிய ஷாருக்கான் ‘டன்கி’ திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாவதை உறுதி செய்துள்ளார். ’பதான்’, ‘ஜவான்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஷாருக்கானுக்கு இந்த ஆண்டு வெளியாகும் மூன்றாவது படமாக இது இருக்கும்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இதில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரெட் சில்லீஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ரூ.700 கோடி வசூலை நெருங்கியுள்ளது.