

2004-ஆம் ஆண்டு வெளியான பிரபல ஹாலிவுட் படத்தை அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்யவிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் க்ளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மில்லியன் டாலர் பேபி’. 2004-ஆம் ஆண்டு வெளியான இந்த 30 மில்லியன் டாலர் பட்ஜெட் திரைப்படம், சர்வதேச அளவில் 216.8 மில்லியன் டாலர்களை வசூலித்ததோடு, சிறந்த படம், சிறந்த இயக்குநர் (ஈஸ்ட்வுட்), சிறந்த நடிகை (ஹிலாரி ஸ்வாங்), சிறந்த உறுதுணை நடிகர் (மார்கன் ஃப்ரீமேன்) ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளையும் அள்ளியது.
பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவான இந்தப் படம் தற்போது பாலிவுட்டில் தயாராகிறது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். அக்ஷய் குமார் க்ளிண்ட் ஈஸ்வுட் நடித்த பாத்திரத்திலும், மரினா குவார் என்ற நடிகை ஹிலாரி ஸ்வாங் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
மரினா குவார் இந்தியில் பிக் பாஸ் 10வது பதிப்பில் தோன்றியவர். சிஐடி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். விளம்பர மாடலாகவும் இருந்துள்ளார்.
இந்தப் படம் பற்றி பேசிய மரினா, "அக்ஷய் குமார் போன்ற ஒரு நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு என்பது கனவு நிஜமாவதைப் போல. மாடலிங்கிலிருந்து நடிப்புக்கு வந்த எனது பயணம் கடினமானது. ஆனால் நான் என்றுமே விட்டுக்கொடுத்ததில்லை. எனக்கான அடையாளம் சீக்கிரம் கிடைக்கும் என்பதில் நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
படம் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.