“தினமும் மீன் உணவும், ஐஸ்வர்யா ராய் கண்ணழகும்...” - மகாராஷ்டிர பாஜக அமைச்சரின் யோசனையால் சர்ச்சை

“தினமும் மீன் உணவும், ஐஸ்வர்யா ராய் கண்ணழகும்...” - மகாராஷ்டிர பாஜக அமைச்சரின் யோசனையால் சர்ச்சை
Updated on
1 min read

மகாராஷ்டிரா: “தினமும் மீன் சாப்பிட்டால் ஐஸ்வர்யா ராய் போல கண்கள் அழகாகும்” என மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் விஜய்குமார் காவித் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் நந்துர்பார் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில பழங்குடியின நலத் துறை அமைச்சர் விஜய்குமார் காவித் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது. நிகழ்ச்சியில் பேசிய அவர், “தினமும் மீன் சாப்பிடுபவர்களின் தோல் மென்மையானதாக இருக்கும். மேலும் அவர்களின் கண்கள் மின்னும். யாராவது உங்களைப் பார்த்தால் அந்த நபர் எளிதில் உங்களால் ஈர்க்கப்படுவார்.

நடிகை ஐஸ்வர்யா ராய் பற்றி நான் உங்களிடம் கூறியிருக்கிறேனா? அவர் மங்களூருவில் கடற்கரைக்கு அருகில் வசித்து வருகிறார். அவர் தினமும் மீன் சாப்பிடுவார். நீங்கள் அவரின் கண்களைப் பார்த்திருக்கிறீர்களா? நீங்களும் தினமும் மீன் சாப்பிட்டால் அவரைப் போலவே கண்கள் அழகாகும். மீனில் சில வகையான எண்ணெய் வித்துகள் உள்ளன. அது உங்கள் சருமத்தை மிருதுவாக்கும்” என பேசியுள்ளார். 68 வயதான அமைச்சர் விஜய்குமாரின் மகள் ஹீனா காவித் பாஜகவின் மக்களவை உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரின் இந்தப் பேச்சு குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ அமோல் மிட்காரி, “பழங்குடியின மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத அமைச்சர் இது போன்ற அற்பமான கருத்துகளை தெரிவித்து வருகிறார்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in