

தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு தணிக்கை சான்றிதழ் பெறாத பத்மாவதி படத்தை திரையிட்டது குறித்து தணிக்கைத் துறை தலைவர் பிரஸூன் ஜோஷி அதிருப்தி தெரிவித்துள்ளார். இது, சந்தர்ப்பவாத செயல்களுக்கான முன்னோடியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பத்மாவதி படம் சுற்றி தேசிய அளவில் சர்ச்சை எழுந்துள்ளது. படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகாது என்றும் தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் தணிக்கை செய்யப்படாத நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கு மட்டும் படத்தை திரையிட்டுள்ளார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. படம் பார்த்த பிரபல செய்தியாளர் ஒருவர், வெளிப்படையாக படத்தைப் பற்றி தனது நிகழ்ச்சியில் பேசினார். படத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் எதுவும் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய தணிக்கைத் துறை தலைவர் பிரஸூன் ஜோஷி, "தணிக்கைத் துறை பார்த்து சான்றிதழ் தராமலேயே படம் ஊடகத்தினர் சிலருக்கு திரையிடப்பட்டு, தேசிய தொலைக்காட்சி சேனல்களில் விமர்சனம் செய்யப்படுவதைப் பார்க்கும்போது ஏமாற்றமாக இருக்கிறது. இது அமைப்பின் பங்கை அத்துமீறும் செயல்.
நம் வசதிக்கு ஏற்றவாறு தணிக்கை முறையை ஏனோதானோவென்று அணுகுவது தொலைநோக்கற்ற பார்வையாகும். ஒரு பக்கம் தணிக்கை முறையை விரைவுபடுத்த சொல்லி தணிக்கைத் துறைக்கு அழுத்தம் கொடுத்து அனைத்துக்கும் எங்களை பொறுப்பாக்குகிறார்கள். இன்னொரு பக்கம், அந்த முறையை அத்துமீற முயற்சித்து சந்தர்ப்பவாத செயல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார்கள்.
பத்மாவதி படத்தைப் பொருத்தவரை, இந்த வாரம் தான் படம் தணிக்கைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்கள் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது தயாரிப்பு தரப்புக்குத் தெரியும். அவர்களும் அதை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
படம் வரலாற்று சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதா அல்லது கற்பனையா என்ற பொறுப்பு துறப்பு அறிவிப்பே இல்லை. அது பற்றி விசாரித்து உரிய ஆவணங்களை கேட்டதற்கே தணிக்கை துறையை குற்றம்சாட்டுகிறார்கள். இது ஆச்சரியமாக இருக்கிறது.
தணிக்கைத் துறை என்பது பொறுப்புள்ள அமைப்பு. திரைத்துறை மீதும், சமுதாயத்தின் மீதும் அக்கறை கொண்டுள்ளது. அதனால் அலட்சியமான முறைகளை நடைமுறைபடுத்தாமல், பொறுப்புடனும், பரஸ்பரம் மரியாதையுடனும், சமநிலை அணுகுமுறையுடனும் நடந்து கொள்வோம்" என்றார்.