

இந்திய சினிமாவில் விளையாட்டுத் துறையை மையமாக வைத்து படங்கள் வருவது அரிது. அதிலும், மக்களின் கவனத்தை பெரிய அளவில் பெறாத விளையாட்டுகள் பற்றிய படம் வருவது அரிதிலும் அரிது. அதையும் மீறி, இந்த வகையறா படங்கள் வெளிவந்து, அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. இந்தக் குறையைப் போக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது, 'மேரி கோம்' படத்தின் ட்ரெய்லர்.
ஐந்து முறை 'உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்' பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் மேரி கோம். உலக சாம்பியன் போட்டிகளில் ஆறு முறை பதக்கம் வென்ற ஒரே வீராங்கனையும் இவரே.
கடந்த 2012 ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்ற மேரி கோம் கடந்து வந்த பாதை காயங்களும் வலிகளும் நிரம்பியவை.
இத்தகைய சிறப்பு மிக்க வீராங்கனையின் சுயசரிதையே இந்தியில் 'மேரி கோம்' என்ற சினிமாவாக உருவெடுத்துள்ளது. சஞ்ஜய் லீலா பன்சாலி தயாரித்துள்ள இப்படத்தை ஓமங் குமார் இயக்கியிருக்கிறார். மேரி கோமாக மாறி இருக்கிறார், நடிகை ப்ரியங்கா சோப்ரா.
பாலிவுட் தேவதைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, மேரி கோம் அவதாரம் எடுக்க மேற்கொண்ட சிரத்தையும் அர்ப்பணிப்பும் ட்ரெய்லரிலேயே தெளிவாகத் தெரிகிறது.
மணிப்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த மேரி கோம், தன் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்களையும், துன்பங்களையும் தகர்த்து தன் கனவுகளை அடைந்து உலக சாதனை புரிவதாக கதை அமைகிறது. இந்த சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியங்கா சோப்ராவை ஒரு குத்துசண்டை வீராங்கனைக்குரிய கட்டுக்கோப்பான உடலமைப்பில், தடகள வீராங்கனை போல் காணமுடிகிறது.
சிறு குழந்தையின் கனவில் இருந்து தொடங்கி, சமூகக் கட்டுப்பாடுகள், இன்னல்கள், பயிற்சி, காதல், குடும்பம், வறுமை, குழந்தைகள் என ஒரு குத்துச்சண்டை வீராங்கனையின் வாழ்க்கை நிச்சயம் துடிப்புடனும் உயிர்ப்புடனும் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது இந்த ட்ரெய்லர். மேரி கோம் படம் செப்டம்பர் 5–ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது.