

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் தெரிவித்துள்ளார். இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். தீபிகா படுகோன் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் 7-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கானுடன் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், உறுதிப்படுத்தப்படாமலிருந்த இந்தத் தகவலை படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரான யானிக் பென் (Yannick Ben) உறுதிபடுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “ஷாருக்கானும், விஜயும் ஒரு சண்டைக்காட்சியில் இணைந்து நடித்துள்ளனர். இந்தக் காட்சி நிச்சயம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய வஷுவல் ட்ரீட்டாக இருக்கும்” என்றார்.
மேலும், இந்தச் சிறப்புத் தோற்றத்துக்காக நடிகர் விஜய் ஊதியம் வாங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஷாருக்கான் மற்றும் அட்லீயுடனான நட்பு காரணமாக அவர் பணம் வாங்காமல் நடித்து கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.