விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ டிசம்பர் 15இல் ரிலீஸ்
மும்பை: விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இந்திப் படம் ‘அந்தாதூன்’. பாலிவுட்டில் வெற்றிப் பெற்ற இப்படம் தமிழில் ’அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக்காகிறது. இப்படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் அடுத்ததாக இயக்கும் படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்துள்ள இப்படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று (ஜூலை 17) அறிவித்துள்ளது. அதன்படி ‘மெரி கிறிஸ்துமஸ்’ படம் இந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்துக்கு ப்ரீத்தம் இசையமைக்கிறார். தமிழில் பாடல் வரிகளை யுகபாரதி எழுதுகிறார். மது நீலண்டன் ஒளிப்பதிவு செய்ய, பூஜா லதா சூர்தி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
