

மும்பை: பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே. நடிகையான இவர், ‘லைகர்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்திருந்தார். பான் இந்தியா படமாக உருவான, இந்தப் படம் தமிழிலும் வெளியானது. இந்தப் படமும் அதற்கு முன் அவர் நடித்த ‘கெஹ்ரையான்' படமும் தோல்வியை சந்தித்தது. இப்போது ஆயுஷ்மான் குரானாவுடன் ‘ட்ரீம் கேர்ள் 2’என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார்.
தனது படங்களின் தோல்வி பற்றி அவர் கூறும்போது, “அது பற்றி வருத்தமில்லை. ஒவ்வொரு படங்களில் இருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் இது ஒரு பயணம். முடிவல்ல. தோல்வி பற்றி அதிகம் சிந்திக்காமல், கற்ற பாடத்தை அடுத்தப் படங்களில் எப்படி செயல்படுத்த முடியும் என்று மட்டுமே யோசிக்கிறேன்”என்றார்.
இவர், இந்தி நடிகர் ஆதித்யா ராய் கபூரை காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி கேட்டபோது, “நான் யாரைக் காதலிக்கிறேன் என்பதில் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பது நல்லதுதான். அவர்கள் யூகித்துக் கொண்டே இருக்கட்டும்” என்றார்.