

இந்தி நடிகையான ஹூமா குரேஸி, தமிழில் ரஜினியின் ‘காலா’, அஜித்தின் ‘வலிமை’ படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிகைகளுக்கு ஊதிய பாகுபாடு காட்டுவது வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “பிரபலமாக இருப்பது ஜாலியான விஷயமில்லை. சில நேரம் எங்காவது சென்றால், நான் யாரென்று தெரியக் கூடாது என நினைப்பேன். யாருக்கும் அடையாளம் தெரியாமல் நழுவ விரும்புவேன். அது நிச்சயமாக சாத்தியமில்லை. சில நேரம் உணவகத்தில் உணவு உட்கொண்டு இருக்கும்போது, சிலர் புகைப்படம் எடுக்க வேண்டும் என அருகில் நிற்பார்கள். அவர்களிடம் ‘என் சாப்பாட்டை முடிச்சிடறேனே?’ என்று சொல்ல வேண்டும். எங்கு சென்றாலும் கேமரா பின் தொடர்கின்றன. அதனால் பிரபலமாக இருப்பது விளையாட்டல்ல.
சினிமாவில் ஊதிய பாகுபாடு இருக்கிறது. என்னுடன் நடிக்கும் சக நடிகர் வாங்கும் ஊதியம் எனக்கு கொடுக்கப்படுவதில்லை. இது அவமரியாதையாக இருக்கிறது. அவர்களைப் போலவே நாங்களும் நடிக்கிறோம். அவர்களுக்கு கொடுப்பதை போல நடிகைகளுக்கும் ஊதியம் கொடுத்தால் என்ன? இதில் ஏன் பாரபட்சம்?
தினமும் பெண்களுக்கு எதிரான குற்றச் செய்திகளை வாசிக்கிறோம். அவை மிக சாதாரணமாக நடக்கிறது. ஆனால், எனக்கு பயத்தைத் தருகிறது. பெண்ணுடல்கள் அரசியலாக்கப்படுகின்றன. துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. இதைக் கண்டு யார் கோபப்படாமல் இருக்க முடியும்?” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.