

வெளிநாட்டு சூப்பர்ஹீரோ பாணியில் பாப் கல்சர் வாயிலாக நம் கடவுள்களை குழந்தைகளுக்குக் காட்ட வேண்டும் என்று ஆதிபுருஷ் பட நடிகர் சித்தாந்த் கர்னிக் கூறியுள்ளார்.
ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் கடந்த ஜூன் 16 அன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ள சித்தாந்த் கர்னிக் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், "நம் கடவுள்களை சூப்பர்ஹீரோக்களைவிட சிறப்பானவர்களாகக் காட்டுவது அவசியம். ஆதிபுருஷ் படத்தை எனது உறவுக்காரச் சிறுவன் திரையரங்கில் காணும்போது நானும் உடனிருந்தேன். அந்தச் சிறுவன் படத்தை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். காரணம் கதாபாத்திரங்கள் அவ்வாறாக படைக்கப்பட்டுள்ளன. அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. இதுபோன்ற படைப்புகள் மூலம்தான் நாம் நமது குழந்தைகள் மத்தியில் இதிகாசங்கள், புராணக் கதைகளை நெருக்கமாகக் கொண்டு செல்ல முடியும் என்று நான் உணர்ந்தேன்.
புராணக் கதைகளை பாப் கலாச்சார வடிவில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். நம் கடவுள்கள் கற்பனையான சூப்பர் ஹீரோக்களைவிட மிக மிக நேர்த்தியானவர்கள் என்பதை அறிய வேண்டும். என் உறவினர்கள், நண்பர்கள் பலர் கற்பனையான ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் டிஷர்ட்டுகளை அணிந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் உண்மையில் நமக்கு புராணங்கள், இதிகாசங்களை அத்தகைய கதாபாத்திரங்கள் கடவுள்களாக, புராண நாயகர்களாக இருக்கின்றனர். இருந்தும் அவர்களை நாம் எழுத்தின் வழியாகத்தான் அவர்களை அறிந்து வருகிறோம். அதனால்தான் சூப்பர்ஹீரோக்களின் பாணியில் நம் கடவுள்களை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.