Published : 19 Jun 2023 01:41 PM
Last Updated : 19 Jun 2023 01:41 PM

சனாதன சேவைக்காகவே இப்படத்தை உருவாக்கினோம்: விமர்சனங்களுக்கு ‘ஆதிபுருஷ்’ வசனகர்த்தா விளக்கம்

மும்பை: ‘ஆதிபுருஷ்’ படத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து அப்படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட விளக்கமளித்துள்ளார்.

ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் கடந்த ஜூன் 16 அன்று திரையரங்குகளில் வெளியானது.

எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இப்படத்தின் கிராபிக்ஸ்கள் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் படத்தின் இடம்பெற்ற சில வசனங்கள் ராமாயணத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சர்ச்சைக்குரிய வசனங்களை திருத்த இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த விமர்சனங்கள் குறித்து ‘ஆதிபுருஷ்’ படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா விளக்கமளித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் கூறியிருப்பதாவது:

ராமாயணத்தில் இருந்து ஒருவர் கற்றுக் கொள்ளக்கூடிய முதல் பாடம், அனைவரது உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்பதுதான். சரியோ தவறோ, காலம் மாறும். உணர்வுகள் மட்டுமே நிலைத்திருக்கும்.

’ஆதிபுருஷ்’ படத்தில் நான் 4000 வரிகளுக்கு மேல் வசனம் எழுதியுள்ளேன். ஆனால் 5 வரிகளால் சிலரது உணர்வுகள் புண்பட்டுவிட்டன. நூற்றுக்கணக்கான வரிகளில் ஸ்ரீராமரை போற்றியிருந்தேன், சீதையின் கற்பை பற்றி விவரித்திருந்தேன். அவற்றுக்கான பாராட்டும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அது எனக்கு ஏன் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை.

எனது சொந்த சகோதரர்களே சமூக வலைதளங்களில் என்னை பற்றி அநாகரிகமான வார்த்தைகளை எழுதுகின்றனர். யாருடைய மரியாதைக்குரிய தாய்மார்களுக்காக நான் டிவியில் பலமுறை கவிதைகளை வாசித்தேனோ, அவர்களே என்னை பெற்ற தாயை அநாகரிகமான வார்த்தைகளால் தூற்றுகின்றனர். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தாயையும் தனது தாயாகக் கருதும் ஸ்ரீ ராமரை மறந்துவிடும் அளவுக்கு என் சகோதரர்களுக்கு எப்படி கசப்புணர்வு ஏற்பட்டது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

3 மணி நேரம் ஓடக்கூடிய படத்தில் உங்கள் கற்பனையுடன் மாறுபடும் 3 நிமிட வசனங்களை நான் எழுதியிருக்கலாம். ஆனால் அதற்காக என் நெற்றியில் ‘சனாதன துரோகி ‘என்று எழுத ஏன் அவசரப்பட்டீர்கள் என்று என்னால் அறிய முடியவில்லை. 'ஜெய் ஸ்ரீராம்' பாடலை நீங்கள் கேட்கவில்லையா? 'சிவோஹம்' கேட்கவில்லையா? 'ராம் சியா ராம்' கேட்கவில்லையா? ‘ஆதிபுருஷ்’ படத்தில் சனாதனத்தின் இந்த துதிகளும் என் பேனாவிலிருந்து பிறந்தவைதான்.

உங்கள் மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை, நீங்கள் என் சகோதரர்களாகவே இருந்தீர்கள், இருக்கிறீர்கள், எப்போதும் இருப்பீர்கள். நாம் ஒருவரை ஒருவர் எதிர்த்து நின்றால் சனாதனம் தோற்றுவிடும். சனாதன சேவைக்காகவே ஆதிபுருஷை உருவாக்கியுள்ளோம்.

ஏன் இந்த பதிவு? காரணம், எனக்கு உங்களின் உணர்வை விட பெரியது எதுவும் இல்லை. எனது வசனங்களுக்கு ஆதரவாக எண்ணற்ற வாதங்களை என்னால் முன்வைக்க முடியும். ஆனால் அது உங்கள் வலியைக் குறைக்காது. நானும், படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் சேர்ந்து உங்களைப் புண்படுத்தும் சில வசனங்களை திருத்த முடிவு செய்துள்ளோம். மேலும் திருத்தப்பட்ட வசனங்கள் இந்த வாரத்தில் படத்தில் சேர்க்கப்படும். உங்கள் அனைவருக்கும் ஸ்ரீ ராமர் அருள் புரியட்டும்!

இவ்வாறு மனோஜ் முன்டாஷிர் சுக்லா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x