2.0 அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும்: ஆமிர்கான்

2.0 அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும்: ஆமிர்கான்
Updated on
1 min read

ரஜினியின் '2.0' திரைப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என்று இந்தி நடிகர் ஆமிர்கான் தெரிவித்துள்ளார்.

தனது தயாரிப்பில் 'சீக்ரெட் சூப்பர்ஸ்டார்' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார் ஆமிர்கான்.

அதில் '2.0' திரைப்படம் குறித்து ஆமிர்கான் பேசியிருப்பதாவது:

நான் ஷங்கர் மற்றும் ரஜினி ஆகியோரின் மிகப் பெரிய ரசிகன். '2.0' கண்டிப்பாக மிகப் பெரிய வெற்றிப் படமாக இருக்கும். அனைத்து சாதனைகளையும் அது முறியடிக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஷங்கர் என்னைக் கேட்டார். அந்த கதாபாத்திரத்துக்கு தேவையான உழைப்பைத் தரும் அளவுக்கு தனக்கு ஆரோக்கியம் இல்லை என ரஜினி நினைத்தார். அதனால் அவரே என்னை தொலைபேசியில் அழைத்து இந்தக் கதையில் நடிக்குமாறு கேட்டார். அது அற்புதமான கதை. அந்தக் கதையைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் ரஜினி மட்டுமே என் மனதில் வந்தார்.

என்னை அந்தக் கதாபாத்திரத்தில் பொருத்திப் பார்க்க என்னாலேயே முடியவில்லை. அதனால் இந்தப் படத்தில் என்னால் நடிக்க இயலாது என்றும், ரஜினி மட்டுமே இதில் நடிக்க முடியும் என்றும் ஷங்கரிடம் கூறினேன்.

எனக்கு முதல் பாகம் மிகவும் பிடித்திருந்தது. அது தந்த பாதிப்பால்தான் அந்தக் கதாபாத்திரத்தில் ரஜினியைத் தவிர வேறு யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. நானும் நடிக்கவில்லை. அந்த முடிவை எடுக்க எனக்குக் கடினமாக இல்லை. ஏனென்றால் கண்டிப்பாக அந்தப் படம் அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகும் என்பது எனக்குத் தெரியும்.

இவ்வாறு ஆமீர்கான் தெரிவித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in