

தனது 75வது பிறந்தநாள் மற்றும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடப்போவதில்லை என நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அமிதாப், "இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றது. பிங்க் பாந்தர்ஸ் அற்புதமாக வென்றிருக்கின்றனர். மழையால் படப்பிடிப்பு ரத்தானது. ட்விட்டரில் 30 மில்லியன் ரசிகர்கள், மேலும் உங்கள் தகவலுக்கு, இந்த வருடம் தீபாவளிக் கொண்டாட்டங்கள் கிடையாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான காரணத்தை அமிதாப் கூறவில்லை என்றாலும், மருமகள் ஐஸ்வர்யா ராயின் தந்தை க்ரிஷ்ணராஜ் ராய் மறைவு இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து தனது வலைப்பூவில் பதிவிட்ட அமிதாப், அதில், "எனது 75வது பிறந்தநாளுக்கு எந்த கொண்டாட்டமும் திட்டமிடப்படவில்லை. நான் அன்று ஊரில் இருப்பது கூட சந்தேகமே. இதற்கான காரணம் என்ன என்பதை சிலர் யூகித்து வருகின்றனர். 'வட்டாரங்களிலிருந்து' கிடைக்கும் யூகங்கள் மொத்தமாக தவறாகவும் போகலாம். அந்த வட்டாரம் யார், என்ன என்பது நமக்கு தெரியவே தெரியாது" என்று கூறியுள்ளார்.