

'மெர்சல்' பட சர்ச்சையில் ட்விட்டரில் ஆதரவுக் குரல் தந்த ராகுல் காந்தியை, இந்து சர்க்கார் பட சர்ச்சையை வைத்து பாலிவுட் இயக்குநர் மதுர் பண்டார்கர் மடக்கிப் பேசியுள்ளார்.
'மெர்சல்' பட சர்ச்சை தேசிய அளவில் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. தேசிய எதிர்கட்சிகள் பலவும் மெர்சல் படத்துக்கான தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. மெர்சலுக்கு மோடி எதிர்ப்பு என்ற ரீதியில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, "திரு.மோடி, சினிமா என்பது தமிழ் கலாச்சாரத்தின், மொழியின் ஆழமான வெளிப்பாடு. மெர்சல் விவகாரத்தில் தலையிடுவதன் மூலம் தமிழ் பெருமைக்கு மதிப்பு நீக்கம் செய்ய முயற்சிக்காதீர்கள்" என்று ட்விட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவருக்கு பதிலளித்துள்ள பாலிவுட் இயக்குநர் மதுர் பண்டார்கர், "ஐயா, நான் எந்த படத்தின் தடைக்கும் எதிரானவன். உங்கள் தொண்டர்கள் எனது 'இந்து சர்க்கார்' படத்தை மோசமாக சித்தரித்துக்கொண்டிருந்த போது உங்கள் ஆதரவை எதிர்பார்த்தேன். ஆனால் அப்போது அமைதியாகத் தான் இருந்தீர்கள்" என்று மடக்கிப் பேசியுள்ளார்.
இந்த இருவரது உரையாடல் தற்போது பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.