

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோல்மால் அகைன்’ படத்தில், ‘வரலாம் வா’ பாடல் இணைக்கப்பட்டு இருக்கிறது.
அக்டோபர் 20-ம் தேதி ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘கோல்மால் அகைன்’. அஜய் தேவ்கான், ப்ரணீதா சோப்ரா, தபு, அர்சாத் வர்சி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் தமன். தற்போது இப்படத்தில் ‘பைரவா’வில் இடம்பெற்ற ‘வரலாம் வா’ என்ற பாடலை முறையாக அனுமதி வாங்கி உபயோகப்படுத்தியுள்ளார்கள். அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள இப்பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
தனது பாடல் இந்திப் படத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து சந்தோஷ் நாராயணன், "வரலாம் வரலாம் பாடலைத் தமிழில் பயன்படுத்தியதற்கு ரோஹித் ஷெட்டி, விஜய், அருண்ராஜ் காமராஜ் மற்றும் குழுவினருக்கு இத்தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.