“துரியோதனன், சகுனி”: ரன்பீர் கபூர் - கரண் ஜோஹரை மறைமுகமாக சாடிய கங்கனா

“துரியோதனன், சகுனி”: ரன்பீர் கபூர் - கரண் ஜோஹரை மறைமுகமாக சாடிய கங்கனா
Updated on
1 min read

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் - இயக்குநர் கரண் ஜோஹர் இருவரையும் நடிகை கங்கனா மறைமுகமாக சாடியுள்ளார்.

பாலிவுட் திரைத்துறை மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருபவர் நடிகை கங்கனா ரனாவத். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை தொடங்கி, போதைப் பொருள் சர்ச்சை வரை தொடர்ந்து திரைமறைவில் நடப்பவை குறித்து சமூக வலைதளங்களில், பேட்டிகளிலும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய படம் ஒன்றில் ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திலும், சீதையாக அவரது மனைவி ஆலியா பட்டும் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதே போல நீண்ட இடைவெளிக்குப் பிறகு கரண் ஜோஹர் இயக்கும் ‘ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி’ படம் குறித்த அப்டேட்களும் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் ரன்பீர் கபூர் - கரண் ஜோஹர் இருவரையும் நடிகை கங்கனா ரனாவத் மறைமுகமாக சாடியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள கங்கனா கூறியிருப்பதாவது:

நேற்றைய செய்திகளைப் பற்றி மேலும் விரிவாகப் பார்க்கும்போது, திரையுலகில் எல்லா வகையான அச்சுறுத்தல்களும் உள்ளன என்று தெரிகிறது. ஆனால் அதைவிட மோசமானது இந்த துரியோதனன் (வெள்ளை எலி) மற்றும் சகுனி (பாப்பா ஜோ) ஜோடி. அவர்கள் தாங்கள் வதந்தி பேசக் கூடிய, அடுத்தவர்களைக் கண்டு பொறாமைப்படக்கூடிய, புறம் பேசக்கூடியவர்கள் என்று ஒப்புக் கொள்கின்றனர். சினிமாவில் கிசுகிசுக்களின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் என்று அவர்கள் தங்களை தாங்களே குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.

இந்தப் பதிவில் கங்கனா ரன்பீர் மற்றும் கரண் ஜோஹர் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை. எனினும், இதற்கு முன் நடந்த பல சர்ச்சைகளின் போது, குறிப்பாக சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் ரன்பீர் - கரண் ஜோஹரை நேரடியாக குறிப்பிட்டு கங்கனா விமர்சித்திருந்தார். இதனடிப்படையில் தற்போதும் அவர்களைத்தான் கங்கனா குறிப்பிட்டுள்ளதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in