விளம்பரத்துக்காக இப்படிச் செய்வதா? - நடிகை கஜோலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

விளம்பரத்துக்காக இப்படிச் செய்வதா? - நடிகை கஜோலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
Updated on
1 min read

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் புதிய வெப் சீரிஸ் ஒன்றின் விளம்பரத்துக்காக நடிகை கஜோல் முன்னெடுத்த செயல், நெட்டிசன்களிடையே விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதையடுத்து #ShameOnKajolHotstar என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

பிரபல இந்தி நடிகை கஜோல். இவர் தமிழில் ராஜீவ்மேனன் இயக்கிய ‘மின்சாரக் கனவு’ படத்தில் நடித்திருந்தார். தனுஷ் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இப்போது, நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ தொடரில் நடித்துள்ளார். இந்தத் தொடர் வரும் 15-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இதனிடையே நடிகை கஜோல் நேற்று (ஜூன் 9) தனது ட்விட்டர் பக்கத்தில், சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இது குறித்து அவர் ட்விட்டரில், “வாழ்வின் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். குறிப்பாக அவர், ‘ toughest trials’ என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். அவரது அந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் ‘நம்பிக்கையை தளரவிட வேண்டாம்’ உள்ளிட்ட வார்த்தைகளால் ஆறுதல் கூறியிருந்தனர்.

இந்நிலையில், நடிகை கஜோல் தான் நடிக்கும் புதிய வெப் சீரிஸ் ஒன்றுக்காக இதுபோன்ற பதிவை பதிவிட்டிருப்பது தெரியவந்துள்ளது. கஜோல் நடித்துள்ள ‘தி ட்ரையல்’ (The trial) என்ற இந்த வெப் சீரிஸ் ஜூன் 12-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

இந்த வெப் தொடரின் விளம்பரத்தின் ஒருபகுதியாக அவர் நேற்று ட்விட்டரில் ‘வாழ்வின் கடினமான சோதனையை எதிர்கொள்கிறேன்’ என பதிவிட்டிருந்திருந்தார். ‘விளம்பரத்துக்காக இப்படியா செய்வது?’ என விமர்சித்து வரும் நெட்டிசன்கள் ட்விட்டரில் ‘ #ShameOnKajolHotstar’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். “அடுத்த முறை கஜோல் உண்மையாகவே பதிவை வெளியிட்டாலும் யாரும் நம்ப போவதில்லை” என்று கூறி கடுமையாக சாடி வருகின்றனர்.

நெட்டிசன் ஒருவர், ”மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். ரசிகர்களை அவர் மதிப்பதில்லை என்பது தெளிவாகியுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், “கீழ்த்தரமான விளம்பர யுக்தி அவர் மீதான மரியாதையை சீர்குலைத்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.

“ரசிகர்களை விட வணிகத்துக்கு முன்னுரிமை கொடுப்பது உறுதியாகியுள்ளது. கஜோல் மீதான மரியாதை சிதைந்துவிட்டது” என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in