ஆதரவற்ற குழந்தைகள் ‘ஆதிபுருஷ்’ பார்க்க 10,000 டிக்கெட்டுகளை புக் செய்யும் ரன்பீர் கபூர்
ஆதரவற்ற குழந்தைகள் ‘ஆதிபுருஷ்’ படத்தை பார்க்கும் வகையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் 10 ஆயிரம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வரும் ஜூன் 16-ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானபோது, அதன் மோசமான கிராபிக்ஸால் இணையத்தில் கடும் கிண்டலுக்கு உள்ளானது. இதன் எதிரொலியாக படத்தின் கிராபிக்ஸ் பணிகளை மேலும் ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்து படக்குழு புதுப்பித்தது. இதனால், கடந்த ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய படம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் ‘ஆதிபுருஷ்’ படத்தை பார்க்கும் வகையில் 10 ஆயிரம் டிக்கெட்டுகளை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் முன்பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தெலுங்கு தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், தெலங்கானாவில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இலவசமாக படம் பார்க்கும் வகையில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
