Published : 22 Oct 2017 07:02 PM
Last Updated : 22 Oct 2017 07:02 PM

‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு தடை: பெண்ணியவாதிகள் கூச்சலிடுவது ஏன்?- ஆண்டனி காட்டம்

கல்லூரி பெண்கள் தங்கள் உளவியல் பற்றி பேசுவதைக் கேட்க கூட பொறுமையில்லாமல் பெண்ணியவாதிகள் கூச்சலிடுவது ஏன்? என்று 'நீயா நானா' நிகழ்ச்சியின் இயக்குநரும், தயாரிபாளருமான ஆண்டனி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

வாரம்தோறும் ஞாயிறு அன்று விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நீயா நானா நிகழ்ச்சியில் யார் அழகு? கேரளத்துப் பெண்களா? தமிழ்நாட்டுப் பெண்களா? என்ற தலைப்பில் இன்று விவாதம் நடைபெறுவதாக இருந்தது. இந்தத் தலைப்பு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையானது. பெண்களை காட்சிப் பொருளாகப் பார்ப்பது மட்டுமின்றி, அதை வைத்து விவாதம் நடத்துவதற்கு பலதரப்பினரிடமிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. பெண்கள், பொதுமக்கள் என எல்லா தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்தன.

இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று மனிதி பெண்ணிய அமைப்பினர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். அழகு தொடர்பான நீயா நானா ஒளிபரப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாக காவல் ஆணையர் அலுவலகம் சார்பில் அதிகாரபூர்வ தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இன்றைய நீயா நானா நிகழ்ச்சி நிறுத்திவைக்கப்பட்டு, ஏற்கெனவே ஒளிபரப்பான நிகழ்ச்சியே மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக நீயா நானா நிகழ்ச்சியின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆண்டனி தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''இன்றைய நீயா நானாவின் தலைப்பு கல்லூரி கேம்பஸ் உரையாடல். அது கேரள பெண்கள் vs தமிழ் பெண்களின் அழகு பற்றி பேசியது. புதிய தலைமுறையைச் சார்ந்த உளவியல் தலைப்புகள், தமிழ் சூழலில் அவர்களின் உலகமான விஜய்-அஜித், மீம் கிரியேட்டர்கள், பெருகும் ஆண் பையன்களின் மேக்கப், காதலில் சுயமரியாதை போன்ற பல தலைப்புகளில் பேசியுள்ளோம்.

அந்த வடிவத்தில் எடுக்கப்பட்ட தலைப்பே இன்றைய நீயா நானா. இதில் கேரள பெண்களும், தமிழ் பெண்களும் தங்களின் உடையழகு பற்றியும், நகையழகு பற்றியும், ஆளுமையின் அழகு பற்றியும், அகமும் புறமும் சார்ந்து பேசினர். அவர்களின் குரல் இந்த முறை இடதுசாரி பெண்ணியவாதிகளால் நெறிக்கப்பட்டது. பெண்ணின் அழகைப் பற்றி பேசவே கூடாது என்று காவல்துறை வாயிலாக தடை வாங்கியுள்ளனர் இடதுசாரி பெண்ணியவாதிகள்.

கல்லூரி பெண்கள் தங்கள் உளவியல் பற்றி பேசுவதைக் கேட்க கூட பொறுமையில்லாமல் இவர்கள் கூச்சலிடுவது ஏன்? ஒரு நிகழ்ச்சி வருவதற்கு முன்பே தடை விதிக்க கோரும் மத அடிப்படைவாதிகளுக்கும், சாதிய அடிப்படைவாதிகளுக்கும், இடதுசாரி அடிப்படைவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?'' என்று ஆண்டனி கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x