Published : 01 Jun 2023 09:35 AM
Last Updated : 01 Jun 2023 09:35 AM
சித்தார்த் நடித்துள்ள ‘டக்கர்’, ஜூன் 9-ல் வெளியாக இருக்கிறது. கப்பல்’ படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கி இருக்கும் இந்தப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரித்துள்ளனர். திவ்யன்ஷா கவுசிக், யோகிபாபு, அபிமன்யு உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படம் பற்றி நடிகர் சித்தார்த்திடம் பேசினோம்.
‘டக்கர்’ என்ன மாதிரியான படம்?
நாங்க கல்லூரி படிக்கும்போது ஒரு கமர்சியல் படம்னா, அது ஒரு ஃபார்முலா மாதிரி இருக்கும். அந்த மாதிரி படங்களை இப்ப இருக்கிற ரசிகர்களுக்கு கொடுத்தா எப்படி இருக்கும்னு நினைச்சு உருவாக்கிய படம் இது. ஒரு சாதாரண இளைஞன், எப்படியாவது பணக்காரன் ஆகணும்னு நினைக்கிறான். முடியலை. கோபம் வருது. அந்த கோபத்தால வன்முறையை கையாள்கிறான். பிறகு என்னென்ன பிரச்சினையை அவன் சமாளிக்கிறான் அப்படிங்கறதுதான் கதை. திரைக்கதையில இயக்குநர் புதுமை பண்ணியிருக்கார். முக்கியமா இதுல ஹீரோயின் ‘கேரக்டரைசேஷன்’ ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த கேரக்டர் இந்த தலைமுறைக்கானதா இருக்கும். தமிழ், தெலுங்குல படம் ரிலீஸ் ஆகுது.
எதுக்காக ‘டக்கர்’ங்கற தலைப்பு?
‘டக்கர்’னா வட இந்தியாவுல போட்டினு சொல்வாங்க. சில ஊர்கள்ல ஸ்மார்ட்டா இருக்கறதை ‘டக்கரா’ இருக்காம்பாங்க. மோதல், சூப்பர்னு இதுக்குபல அர்த்தம் இருக்கு. இந்தப் படத்துக்கு அப்படிதலைப்பு வைக்க காரணம், மோதல். ஒரு பொண்ணுக்கும் ஹீரோவுக்குமான மோதல்தான் படம். நான் நடிச்சதுல இதுதான் முழு கமர்சியல் படம். இதுலஎல்லாமே இருக்கு. படம் கண்டிப்பா ஹிட்டாகும்.
‘லவ்வர் பாய்’ இமேஜ்தான் உங்களுக்கு இருக்கு. இதுல ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கீங்களாமே?
இதுல ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் இருக்கு. அதுக்காக மெனக்கெட்டேன். எதுலயும் சமரசம் பண்ணக் கூடாதுன்னு எடை கூடினேன். வியட்நாம்ல இருந்து ஸ்டன்ட் கலைஞர்கள் வந்து பயிற்சி அளிச்சாங்க. அவங்ககிட்ட மார்ஷியல் ஆர்ட்ஸ் கத்துக்கிட்டேன். பிழிஞ்சு எடுத்துட்டாங்க. நிறைய வலிகளைச்சந்திச்சேன். அது உண்மையில எனக்கு புது அனுபவமா இருந்தது. ஆக்ஷன் பண்றது ஈசியில்லை. அதைஎல்லாம் தாண்டி, இப்ப படத்தைப் பார்க்கும்போது, ‘நானும் ஆக்ஷன் நல்லாத்தான் பண்ணியிருக்கேன்’னு தோண வச்சுது. அதுக்கு இயக்குநருக்கு நன்றிசொல்லணும். படத்தைப் பார்த்துட்டு எங்க அப்பா நல்லாயிருக்குன்னார். அது எனக்கு பெரிய பாராட்டு.
சினிமாவுக்கு நீங்க வந்து 20 வருஷமாச்சே...
ஷங்கர் சாரோட ‘பாய்ஸ்’படத்துல 2003-ம் வருஷம் அறிமுகமானேன். இவ்வளவு வருஷம் சினிமாவுல இருக்கேன் அப்படிங்கறதே பெரிய விஷயம். இப்ப அவரோட ‘இந்தியன் 2’ படத்துல முக்கியமான ரோல் பண்ணியிருக்கேன். அது பற்றி நேரம் வரும் நிறைய பேசுவேன். அடுத்த 18 மாசங்கள்ல என்னோட 6 படங்கள் தியேட்டருக்கு வரும். கரோனாவால எனக்கு சின்ன இடைவெளி இருந்தது உண்மைதான். இப்ப அது குறையுது.
உதவி இயக்குநரா இருந்து ஹீரோவா ஆனவர் நீங்க. எப்ப படம் இயக்கப் போறீங்க?
நான், 22 வருஷத்துக்கு முன்னால அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தேன். அதுக்குப் பிறகு சினிமாவுல பல துறைகள்ல, அதைவிட அதிகமா வேலை பார்த்திருக்கேன். நடிகர், பாடகர், பாடலாசிரியர், ஸ்கிரிப்ட் எழுதிருக்கேன். படம் இயக்கியபடியே நடிக்கறதுக்கு எனக்கு நம்பிக்கை வரலை. அதனால எப்ப படம் இயக்க போறேன்னும் எனக்கு தெரியல. அப்படி பண்ணினா, அதுல நான் நடிக்க மாட்டேன். அது உலகமகா பொறுப்பு. சினிமாவுல இருக்கிற 24 கிராஃப்டையும் தாங்கிக்கிட்டு, நமக்குள்ள இருக்கிற கதையை சரியா படமாக்கி, அதை ரசிகர்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறது பெரிய வேலை.
சமூக வலைதளங்கள்ல இப்ப பார்க்க முடியலையே...
‘சித்தார்த்னா யாரு? அவன் நல்ல நடிகன்யா’ன்னு மற்றவங்க சொல்லணும்னு நினைக்கிறவன் நான்.20 வருஷமா நடிகனா இருக்கேன்னா, அந்த எண்ணம்தான் எல்லாருக்கும் முதல்ல வரணும். நான் நடிகன் அப்படிங்கறதாலதான் மத்தவங்களுக்கும் என்னைத் தெரியும். அதனால, அந்தக் கடமையை முதல்ல நிறைவேற்றிருவோம்னு முடிவு பண் ணிட்டேன். அதனாலதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT