

பிரபல தெலுங்கு ஹீரோ ரவிதேஜா நடிக்கும் படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில், காயத்ரி பரத்வாஜ், நுபுர் சனோன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை வம்சி இயக்குகிறார். 70-களில் நடக்கும் கதையை கொண்ட இந்தப் படத்தை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் சார்பில் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். அக். 20-ம் தேதி படம் வெளியாகிறது.
இதன் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு பதிப்பிற்கு வெங்கடேஷ் குரல் கொடுக்க, இந்தியில் ஜான் ஆபிரகாம், கன்னடத்தில் சிவராஜ்குமார், தமிழில் கார்த்தி, மலையாளத்தில் துல்கர் சல்மான் ஆகியோர் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ உலகத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். ராஜமுந்திரியில் உள்ள ஹேவ்லாக் பாலத்தில் ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்து படத்தில் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர்.