Published : 06 Oct 2017 06:09 PM
Last Updated : 06 Oct 2017 06:09 PM

கங்கணா ரணாவத்தின் தொடர் குற்றச்சாட்டு: முதன் முறையாக பதிலளித்துள்ள ஹிருத்திக் ரோஷன்

கங்கணா ரணாவத்தின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு, முதன் முறையாக ஹிருத்திக் ரோஷன் பதிலளித்திருக்கிறார்.

ஹிருத்திக் ரோஷன் மீதான கங்கணா ரணாவத் தொடர் குற்றச்சாட்டுகளால் இந்தி திரையுலகம் பெரும் அதிர்ச்சியடைந்தது. இக்குற்றச்சாட்டுகள் குறித்து எந்ததொரு பதிலுமே அளிக்காமல் தொடர்ந்து அமைதியாகவே இருந்து வந்தார் ஹிருத்திக் ரோஷன்.

தற்போது தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முதன்முறையாக கடிதமொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஹிருத்திக் ரோஷன்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் ஆக்கபூர்வமான, புதிதாக ஏதாவது செய்யும் வேலையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். அதோடு ஒத்துவராத எதையும் நான் புறக்கணித்து, விலகிவிடுவேன். அதை கவனச்சிதறலாகவே பார்ப்பேன்.

அறியாமையும், எதிர்வினை ஆற்றாமல் இருப்பதும் கண்ணியம் என்பதை நம்புகிறேன். அதுவே தேவையில்லாத தொடர் இடையூறுகளை ஊக்குவிக்காமல் இருக்கும். ஆனால் உடல்நலக் கோளாறு போல, சில சமயம் நாம் புறக்கணித்த பிரச்சினை கேடு விளைவிக்கக்கூடியதாக மாறும். எனது இந்த சூழலும் துரதிர்ஷ்டவசமாக அப்படி மாறிவிட்டது.

இப்போது இருக்கும் விஷயத்தைப் பார்த்தால், ஊடகங்களுக்கு அதை விட்டுவிடும் எண்ணம் இருப்பது போலத் தெரியவில்லை. எனக்கு சம்பந்தம்பில்லாத ஒரு சூழலைப் பற்றி, எனது குணத்தை நியாயப்படுத்தி நான் பேசி இந்த கூத்தில் கலந்து கொள்வது நன்றாகத் தெரியவில்லை. வேறு வழியில்லாமல் வக்கிரமான, அசிங்கமான ஒரு சிக்கலில் நான் இழுக்கப்பட்டிருக்கிறேன். இது என்னால் நடந்ததல்ல.

உண்மை இதுதான். சம்பந்தப்பட்ட பெண்ணை, எனது வாழ்க்கையில், எப்போதும் நான் தனிப்பட்ட முறையில் சந்தித்ததில்லை. ஆம், நாங்கள் இணைந்து வேலை செய்திருக்கிறோம். ஆனால் தனிப்பட்ட முறையில் சந்தித்ததில்லை. ஒரு ரகசிய உறவைப் பற்றிய குற்றச்சாட்டுக்கு எதிராக நான் போராடவில்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். என்னை நல்லவனாகக் காட்டிக்கொள்ளவும் முயற்சிக்கவில்லை. எனது தவறுகள் என்னவென்று எனக்குத் தெரியும். நானும் மனிதன் தான்.

உண்மையில் இந்த சூழலை விட வீரியமான, ஆபத்தான ஒன்றிலிருந்து என்னை நான் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் வெகு சில ஊடகங்களும், பொதுமக்களுமே உண்மை மீது ஆர்வம் இருப்பதாகத் தெரிகிறது. இது கஷ்டப்பட்டு நான் தெரிந்து கொண்ட யதார்த்தம்.

பெண் பாதிக்கப்படுபவளாகவும், ஆண் வஞ்சிப்பவனாகவும் மட்டுமே இருக்கும் உலக அமைப்புக்கு ஏற்றவாரு இருக்கும் ஒரு பொய்யை நம்புவதே சவுகரியம் என மக்கள் நினைப்பார்களேயானால், அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

பெண்கள் ஆண்களின் கையில் பல நூற்றாண்டுகளாக அவதிப்பட்டு வருகிறார்கள். அதிலும் சில ஆண்களின் மூர்க்கம், அவர்களுக்கு கடுமையான தண்டனை தரப்படவேண்டும் என்று என்னை  கொந்தளிக்கவைக்கிறது. ஆனால் ஒரு ஆண் பலவீனமாக இருக்க மாட்டான், ஒரு பெண் பொய் சொல்ல மாட்டாள் என்ற தீர்மானத்துக்கு அது வழிவகுக்கும் என்றால், அப்படியே இருக்கட்டும். அதிலும் எனக்குப் பிரச்சினை இல்லை.

7 வருடங்களாகத் தொடர்ந்து, இரண்டு பெரிய நட்சத்திரங்களுக்கு இடையே உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு எந்தத் தடயமும் இல்லை. சாட்சியோ, எங்களுக்குத் தெரியாமல் கூட ரகசியமாக எடுக்கப்பட்ட படங்களோ இல்லை. பாரிஸில் ஜனவரி 2014 அன்றி நடந்ததாக சொல்லப்படும் நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்ட ஒரு செல்ஃபி கூட இல்லை. காதல் உறவு இருந்தது என்பதை நிரூபிக்க எந்தவொரு ஆதாரமும் இல்லை. ஆனாலும் நாம் இன்னொரு தரப்பைத்தான் நம்புவோம். ஏனென்றால் ஏன் ஒரு பெண் பொய் சொல்ல வேண்டும் என்ற பொதுப் புத்தி.

ஜனவரி 2014ல் நான் இந்தியாவைத் தாண்டி எங்கும் பயணப்படவில்லை என்பது எனது பாஸ்போர்ட்டில் இருக்கிறது. அந்த மாதத்தில்தான் எனக்கு பாரிஸில் நிச்சயதார்த்தம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த உறவுக்கு ஆதாரமாக சொல்லப்படுவது ஊடகங்களில் காட்டப்படும், ஃபோட்டோஷாப்பில் உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படம். அது போலி என்பது அடுத்த நாளே எனது நண்பர்களாலும் முன்னாள் மனைவியாலும் கூட நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இது பற்றி யாரும் கேட்கவில்லை. ஏனென்றால் பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என நமக்கு கற்றுதரப்பட்டுள்ளது. நாம் செய்யவேண்டியதுதான். நானும் அப்படி வளர்க்கப்பட்டவன்தான். என் குழந்தைகளுக்கும் அந்த விஷயங்களை கற்றுத் தருவேன். பெண்களுக்காக போராடவேண்டும் என கண்டிப்பாக நான் அவர்களுக்குக் கற்றுத் தருவேன்.

மொத்தம் 3000 இமெயில்கள் என் தரப்பிலிருந்து மட்டும் சென்றுள்ளன. ஒன்று எனக்கு நானே அனுப்பியது, அல்லது சம்பந்தப்பட்ட பெண் எனக்கு அனுப்பியது. இரண்டில் எது உண்மை எது பொய் என்பதை சைபர் க்ரைம் இன்னும் சில நாட்களில் நிரூபிக்கும். அதற்காக எனது லேப்டாப், மொபைல்கள் என அனைத்து கருவிகளையும் சைபர் பிரிவிடம் ஒப்படைத்துவிட்டேன். ஆனால் இன்னொரு தரப்பு அதை செய்ய மறுத்துவிட்டது. விசாரணை இன்னும் முடியவில்லை.

இது காதலர்களுக்குள் நடந்த சண்டை அல்ல என்பதை மீண்டும் சொல்கிறேன். இதை அப்படிப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, உண்மையில் என்ன பிரச்சினை என்பதைப் பார்க்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதனால் நான் 4 வருடங்களாக துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறேன். பெண்களுக்கு சமூகத்தில் இருக்க வேண்டிய, இருக்கும், பாரபட்சம் காரணமாக என் தரப்பு நியாயங்களை கூற முடியாமல் இருந்திருக்கிறேன்.

எனக்கு கோபமில்லை. என் வாழ்க்கையில் கோபத்துக்கு அதிக இடம் கொடுத்ததில்லை. ஆணிடமோ, பெண்ணிடமோ இதுவரை நான் சண்டையிட்டதே இல்லை. என் விவாகரத்தில் கூட சண்டையில்லை. நானும், என்னை சுற்றியிருப்பவர்களும் அமைதியையே பின்பற்றுகிறோம்.

நான் யாரைப் பற்றியும் தீர்மானிக்கவோ, குற்றம்சாட்டவோ இங்கு இல்லை. ஆனால் என் தரப்பு உண்மையை நியாயப்படுத்த நேரம் இது. ஏனென்றால் உண்மை பாதிக்கப்படும்போது, சமூகத்தின் கூட்டு உணர்வு பாதிக்கப்படுகிறது. நாகரிகம் பாதிக்கப்படுகிறது. வீட்டில் குடும்பமும், குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு ஹிருத்திக் ரோஷன் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x