79 வயதில் 7வது குழந்தைக்கு தந்தையான நடிகர் ராபர்ட் டி நீரோ
நியூயார்க்: ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான ராபர்ட் டி நிரோ ஏழாவது குழந்தைக்கு தந்தையாகி இருப்பதாக அறிவித்துள்ளார். அவருக்கு வயது 79.
ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் ராபர்ட் டி நீரோ (79). ‘ரேஜிங் புல்’, ‘காட்ஃபாதர் 2’, ‘டாக்ஸி டிரைவர்’, ‘குட்ஃபெல்லாஸ்’, ‘ஐரிஷ்மேன்’ என ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இரண்டு முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்றவர். தற்போது ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’, ‘அபவுட் மை ஃபாதர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனது ‘அபவுட் மை ஃபாதர்’ படம் தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு ராபர்ட் டி நீரோ பேட்டியளித்திருந்தார். அதில் தனக்கு சமீபத்தில் ஏழாவது குழந்தை பிறந்ததை அவர் அறிவித்தார். ஆனால் அப்பேட்டியில் தனது குழந்தையின் பெயர் குறித்தோ, குழந்தையின் தாய் குறித்தோ அவர் எதுவும் குறிப்பிடவில்லை. ராபர்ட் டி நீரோவுக்கு ஏற்கெனவே ட்ரேனா (51), ரஃபேல் (46), இரட்டையர்கள் ஜூலியன் - ஆரோன் (27), எலியட் (27), ஹெலென் கிரேஸ் (11) என ஆறு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
