

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் கதை தன்னுடையது என மலையாள திரைக்கதை ஆசிரியர் ஒருவர் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
விபுல்ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. ஆதா ஷர்மா, சித்தி இத்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி’. இதன் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்ட இந்தப் படத்துக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தமிழ்நாட்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி இப்படம் திரையிடப்படாது என்றும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்துள்ளன. அதேபோல் இப்படத்தை தடை செய்வதாக அம்மாநில மேற்கு வங்க அரசும் அறிவித்துள்ளது.
இதனிடையே, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் திரைக்கதை தன்னுடையது என்று இளம் மலையாளத் திரைக்கதை ஆசிரியர் யது விஜயகிருஷ்ணன் என்பவர் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். செய்திசேனல் ஒன்றில் பேசியுள்ள அவர், "‘தி கேரளா ஸ்டோரி’ பட இயக்குநர் சுதிப்டோ சென்னுடன் இணைந்து 2017ல் 'லவ் ஜிஹாத்' தொடர்பான ஒரு ஆவணப்படத்தில் வேலை பார்த்தேன். 2021ல் இதே மையக்கருவை வைத்து இந்தியில் படம் எடுக்க ஸ்கிரிப்ட் உள்ளதா என்று சுதிப்டோ என்னிடம் கேட்க, நானும் ஒன்லைன் ஒன்றை சொல்லி அதற்கு ஒப்புதல் வாங்கி ‘தி கேரளா ஸ்டோரி’ ஸ்கிரிப்ட்டை எழுதினேன்.
அந்த ஸ்கிரிப்ட்டை ஒப்படைத்த சமயத்தில், ஸ்கிரிப்ட் ரைட்டர் என்கிற முறையில் எனது பெயரைக் குறிப்பிட்டிருந்த ஒப்பந்தத்தைத் தயாரிப்பு நிறுவனம் வாபஸ் பெற்றது. புதிய ஒப்பந்தம் போடப்படுவதாக சொல்லப்பட, படத்தின் மற்றப் பணிகளில் படக்குழுவுடன் சேர்ந்து ஒத்துழைத்தேன். ஆனால் புதிய ஒப்பந்தத்தில் ஸ்கிரிப்ட் ரைட்டர் என்றில்லாமல், ஆலோசகர் என்று எனது பெயர் சேர்க்கப்பட்டது.
இதன்பின் சம்பளம் உள்ளிட்ட காரணங்களால் அந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டேன். எனினும், படம் வெளியானதும் நன்றி பட்டியலில் எனது பெயர் இருக்கும் என எதிர்பார்த்தேன். எந்த இடத்திலும் படக்குழு எனது பெயரை குறிப்பிடவில்லை. பெரிய நோக்கத்துடன் எடுக்கப்பட்ட ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு எதிராக நான் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க போவதில்லை. தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இதில் ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதே எனது எதிர்பார்ப்பு" என்று பேசியுள்ளார்.
மேலும் யது விஜயகிருஷ்ணன் இந்தப் பேட்டிக்கு ஆதாரமாக தனது பேஸ்புக் பக்கத்தில் இயக்குநர் சுதிப்டோ சென் உடனான வாட்ஸ்அப் உரையாடலை வெளியிட்டுள்ளார்.