

விருதுநகர்: முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் விருதுநகரில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏராளமானோர் விருப்பத்துடன் வாங்கிச்செல்கிறார்கள்.
பலா மரம் அத்தி, மல்பெரி, ரொட்டிப்பழம் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தியா மட்டுமின்றி பங்களாதேஷ், இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா மழைக்காடுகள் மற்றும் வெப்பமண்டல பகுதிகளில் பயிரிடப்படுகிறது. ஒரு முதிர்ந்த பலா மரம் சுமார் 200 பழங்களை விளைக்கிறது. பலாப்பழம் "காய்கறி இறைச்சி" என்றும் அழைக்கப்படுகிறது. பலாப்பழகத்தில் நீர் சத்து, மாவுச்சத்து, புரதச் சத்து, கொழுப்பு, நார்சத்து போன்றவை அடங்கி உள்ளது.
சுவை மிகுந்த பலாப்பழம் தமிழகத்தில் பண்ருட்டி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி போன்ற பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளிலும் அதிகம் விளைவிக்கப்படுகிறது. தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் பண்ருட்டி, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளிலிருந்து விருதுநகருக்கு பாலாப்பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கிறார்கள்.
இதுகுறித்து, பலா விற்பனை செய்துவரும் ராஜன் கூறுகையில், ''ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பழ சீசன் வரும். தற்போது கோடை காலம் என்பதால் பலா அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருப்பதால் விலையும் சற்று குறைந்துள்ளது. குறைந்தது 4 கிலோ முதல் அதிகபட்சமாக 20 கிலோ வரை பலாப்பழம் எடை கொண்டது. பலாப்பழம் ஒரு கிலோ ரூ.40க்கும், சில்லரை விற்பனையில் பலாச்சுளை கால் கிலோ ரூ.40க்கும் விற்பனை செய்து வருகிறோம். பொதுமக்களும் விருப்பத்தோடும் ஆர்வத்தோடும் வாங்கிச்செல்கின்றனர்'' என தெரிவித்தார்.