

ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்துள்ள ருத்ரன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'ஜிகர்தண்டா' உட்பட பல படங்களைத் தயாரித்தவர் பைவ் ஸ்டார் கதிரேசன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ருத்ரன்’. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, சரத்குமார் வில்லனாக நடிக்கிறார். பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் ஆயுதத்துடன் ராகவா லாரன்ஸ் ஆக்ரோஷமாக நிற்க, அவரால் தாக்கப்பட்ட பலர் கீழே விழுந்து கிடப்பது போல, லாரன்ஸ்க்கே உரித்தான ஸ்டைலில் வெளியாக அது முதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. ஆக்சன் பேக் டிரெய்லர் என சொல்லப்பட்டதுக்கு ஏற்ப, தொடக்கம் முதல் இறுதிவரை டிரெய்லரில் ஆக்சன்தான். பாலைய்யாவுக்கே டப் கொடுக்கும் வகையில், குண்டர்களை எப்போதும் காற்றில் பறக்க வைத்துக்கொண்டிருக்கிறார் லாரன்ஸ். வசனங்களும், அதுபோல தான், அதற்கு ஒரு சான்றுதான் டிரெய்லர் இறுதியில் வரும் 'அந்த பூமிய படைச்ச சாமிடா நான்' பன்ச்.
விறுவிறுப்பாக செல்லும் இந்த டிரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.